நிலப் போக்குவரத்து ஆணையம் ரயில் கட்டமைப்பின் சில பகுதிகளில் நீண்டநேர, திட்டமிட்ட செயல்பாட்டு நிறுத்தங்களை மேற்கொள்வதன்மூலம் முக்கியமான பராமரிப்பு, புதுப்பிப்புப் பணிகளைப் பாதுகாப்பாகவும் திறம்படவும் செய்ய இயலும் என்று அனைத்துலக ரயில் வல்லுநர் குழு பரிந்துரைந்துள்ளது.
“சிங்கப்பூரின் ரயில் கட்டமைப்பு விரிவடைவதாலும் மூப்படைவதாலும், பராமரிப்பு, புதுப்பிப்புப் பணிகளும் விரைவுபடுத்தப்பட வேண்டும்,” என்று டாக்டர் டோனி லீ தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரின் பெருவிரைவு, இலகு ரயில் கட்டமைப்புகளின் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்கான பணிக்குழுவிற்கு ஆதரவளிக்கும் தன்னிச்சையான ஐந்து உறுப்பினர் ஆலோசனைக் குழுவின் சார்பில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) டாக்டர் லீ இதனைத் தெரிவித்தார்.
அன்றாட ரயில் சேவை செயல்பாடுகளுக்கு இடையே பல முக்கிய அமைப்புகளைப் புதுப்பிப்பதில் சவால்கள் உள்ளன என்றும் அப்பணிகளைக் கவனமாகத் திட்டமிட்டு, பரவலாக மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றும் அவர் விளக்கினார்.
இப்போதைக்கு, ரயில் சேவைகள் முடிந்த பிறகு கிடைக்கும் குறுகிய நேரத்தில் அவற்றை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றும் அவர் சுட்டினார்.
ஹாங்காங் பொதுப் போக்குவரத்துச் சேவை வழங்குநரான எம்டிஆர் நிறுவனத்தின் முன்னாள் செயல்பாட்டு, புத்தாக்க இயக்குநநான டாக்டர் லீ, ரயில் சேவை நம்பகத்தன்மைப் பணிக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காகக் கடந்த அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்ட ஐவர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
இம்மாதம் 17ஆம் தேதிமுதல் 21ஆம் தேதிவரை அந்த வல்லுநர் குழு, நிலப் போக்குவரத்து ஆணையம், எஸ்எம்ஆர்டி, எஸ்பிஎஸ் டிரான்சிட் அதிகாரிகளைச் சந்திக்கும் என்று அம்மூன்று நிறுவனங்களும் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.
அத்துடன், சிங்கப்பூரின் ரயில் போக்குவரத்துச் செயல்பாடுகள், பராமரிப்பு, வெவ்வேறு தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பு உள்ளிட்டவை குறித்து அறிந்துகொள்ள ரயில் சேவைக் கட்டமைப்புகளையும் அது பார்வையிடும்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், சேவைத் தடைகளை எதிர்கொள்வதில் அவற்றின் திறன்கள் குறித்தும் அது ஆராயத் திட்டமிட்டுள்ளது.
அந்த ஐந்து வல்லுநர்களும் ஒன்றாகச் சிங்கப்பூர் வந்திருப்பது இதுவே முதன்முறை.
முன்கணிப்புப் பராமரிப்பைச் (predictive maintenance) சிறந்த முறையில் மேற்கொள்ள ஏதுவாக விரிவான நிலைமைக் கண்காணிப்பு முறையை அறிமுகம் செய்வதும் வல்லுநர் குழுவின் பரிந்துரைகளில் அடங்கும்.
ரயில் கட்டமைப்புகளை நிர்வகிக்கவும் பிரச்சினை ஏற்படும் முன்னரே அவற்றைக் கண்டறிந்து சரிசெய்யவும் மின்னிலக்க அமைப்புகள், செயற்கை நுண்ணறிவு, தானியக்கம் உள்ளிட்ட புதிய அம்சங்கள் குறித்தும் பணிக்குழு ஆராய்ந்து வருவதாக டாக்டர் லீ தெரிவித்தார்.
“சூழ்நிலைகளை முன்னரே சோதித்துப் பார்த்து, பிரச்சினைகளை முன்னரே மட்டுப்படுத்துவதற்கு பாவனை அமைப்புகளில் முதலீடு செய்வதும் பயன்தரும்,” என்றார் டாக்டர் லீ.
மேலும், ரயில் துறையில் பொறியியல் திறனாளர் தொகுதியை உருவாக்குமாறும் நிலப் போக்குவரத்து ஆணையத்திற்கும் ரயில் சேவை நிறுவனங்களுக்கும் அக்குழு ஆலோசனை தெரிவித்துள்ளது.
ரயில் சேவை நம்பகத்தன்மைப் பணிக்குழு இவ்வாண்டு இறுதிக்குள் தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ்விடம் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும்.

