சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, தேசிய பூங்காக் கழகத்தால் அக்டோபர் 9ஆம் தேதி நடத்தப்பட்ட திடீர் சோதனையில் ஆப்பிரிக்க ஆமை, முள் வால் உடும்பு உள்ளிட்ட அருகிவரும் விலங்குகள் கைப்பற்றப்பட்டன.
டெலிகிராம் செயலி உட்பட இணையத்தளங்கள் மூலம் சட்டவிரோதமாக வனவிலங்குகளை வர்த்தகம் செய்வதாகச் சந்தேகிக்கப்பட்டவர்களைக் குறிவைத்து தீவு முழுவதும் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக பூங்காக் கழகம் திங்கட்கிழமை (அக்டோபர் 20) வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் கூறியது.
ஆறு இடங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டு, 16 வனவிலங்கு மாதிரிகள் கைப்பற்றப்பட்டதாகவும் அது தெரிவித்தது.
இந்த விலங்குகள் தற்போது லிம் சூ காங்கில் உள்ள பூங்காக் கழகத்தின் வனவிலங்கு மறுவாழ்வு மையத்தில் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சட்டவிரோத வனவிலங்கு விற்பனை தொடர்பாகச் சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் பூங்காக் கழகம் கூறியது.
இத்தகைய வர்த்தகம், அருகிவரும் உயிரினங்களின் உயிர்வாழ்வுக்கு அச்சுறுத்தலாக இருப்பதுடன், உலகெங்கிலும் உள்ள வாழ்விட அழிவுக்கும் காரணமாக விளங்குவதாகக் கழகம் சொன்னது.

