சிங்கப்பூரில் உள்ள அதன் இரண்டு அறைகலன் விற்பனை வளாகங்களுக்கு வெளியே சுவீடன் நாட்டுக் கொடியைக் காட்சிப்படுத்த தான் அனுமதி பெற்றிருப்பதாக ‘இக்கியா சிங்கப்பூர்’ நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
எந்தவொரு வெளிநாட்டுக் கொடியையும் பொதுவில் காட்சிப்படுத்துவது ஒரு குற்றமாகும் என்பதற்கேற்ப, சுவீடன் நாட்டு சில்லறை விற்பனை நிறுவனம் ஏன் சிங்கப்பூரில் ஒரு வெளிநாட்டுக் கொடியைக் காட்சிப்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த இணைய விவாதங்கள் அக்கறை எழுப்பியதை அடுத்து இந்த விளக்கம் தரப்பட்டுள்ளது.
மதர்ஷிப்பின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, “அலெக்சாண்ட்ரா மற்றும் தெம்பனிசில் உள்ள அதன் கடைகளுக்கு வெளியே இக்கியா நிறுவனம் தனது சுவீடன் நாட்டுக் கொடியைப் பறக்கவிட அனுமதி பெற்றுள்ளது,” என்று அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.
சிங்கப்பூரில், வெளிநாட்டுக் கொடியையோ வெளிநாட்டுச் சின்னத்தையோ முறையான அனுமதியின்றி காட்சிப்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.
அவ்வாறு செய்யப்படும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்தத் தனிநபருக்கு $500 வரையிலான அபராதம் அல்லது ஆறு மாதம் வரையிலான சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
குற்றம் புரிந்தது ஒரு நிறுவனமாக இருந்தால், அதற்கு $1,000 வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.