மலேசியாவின் தேசிய நாளை, அந்நாட்டின் குடிநுழைவு, சோதனைச் சாவடி அமைப்புகளுக்கு பெரிய கேக் ஒன்றையும் ‘கப்’ கேக்குகளையும் வழங்கி சிங்கப்பூரின் ஐசிஏ மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டது.
மலேசியாவின் 68வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் 68 ‘கப்’ கேக்குகளை மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு அமைப்பு மற்றும் பங்குனான் சுல்தான் இஸ்கந்தர் சிஐகியூவுக்கு கடந்த வாரம் ஐசிஏ வழங்கியதாக ஏஷியாஒன் தகவல் தெரிவிக்கிறது.
மெர்டேக்கா நாள் என்று அழைக்கப்படும் மலேசியாவின் தேசிய நாள் ஆகஸ்ட் 31ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
ஆகஸ்ட் 30ஆம் தேதி ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் நெருங்கிய உறவுக்கு ஐசிஏ நன்றி தெரிவித்துக்கொண்டது.
“நமது எல்லைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க நாம் ஒன்றிணைந்து செயல்படும் வலுவான பங்காளித்துவத்துக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். நமது நில எல்லைகளுக்கு இடையே சுமூகமான வர்த்தகம் மற்றும் பாதுகாப்பான பயணங்களை உறுதிசெய்து, தொடர்ந்து ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். 68வது பிறந்தநாள் வாழ்த்துகள், மலேசியா,” என்று சிங்கப்பூரின் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் (ஐசிஏ) பதிவில் குறிப்பிட்டுள்ளது.

