குழுவாகத் தங்களது வீட்டு முகவரியை மாற்ற விரும்புவோருக்குக் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் (ஐசிஏ) புதிய ஏற்பாடு ஒன்றைச் செய்துள்ளது.
ஒரே முகவரிக்கு மாற விரும்புபவர்கள் ‘இணையத்தின் வழி முகவரி மாற்றம்’ (இசிஓஏ) சேவையைப் பயன்படுத்தி முகவரி மாற்றத்தை மேற்கொள்ளலாம். ஒரு குழுவில் அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே இருக்க முடியும்.
இந்தப் புதிய குழு வசதி ஆகஸ்ட் 15ஆம் தேதி நடப்புக்கு வரும் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4) அறிக்கை வெளியிட்டது.
இதற்கு முன்னர் இருந்த ‘மைசெல்ஃப் அண்ட் மை ஃபேமலி மேம்பர்ஸ்’ (Myself and my family members) மற்றும் ‘பிறர்’ (Others) பிரிவுகளைவிடத் தற்போது அறிமுகப்படுத்தப்படும் குழுப் (Group) பிரிவு பாதுகாப்பானது என்று ஆணையம் கூறியது.
புதிய வசதியில் முகவரியை மாற்றும் முக்கிய விண்ணப்பதாரர், மற்ற மூவரின் முகவரியை மாற்றத் தகுந்த அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் முக்கிய விண்ணப்பதாரர் தனது முகவரியை மாற்றாமல் மற்றவர்களின் முகவரியையும் மாற்ற முடியாது.
‘இசிஓஏ’ சேவையைச் சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள், நீண்ட நாள் அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் பயன்படுத்தலாம்.
கடந்த ஜனவரி மாதம் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் இணையப் பக்கத்தில் உள்ள ‘மைசெல்ஃப் அண்ட் மை ஃபேமலி மேம்பர்ஸ்’ மற்றும் ‘பிறர்’ ஆகிய பிரிவுகள் தற்காலிகமாக நீக்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
அந்தப் பிரிவுகளில் தகுந்த அனுமதி இல்லாமல் பலமுறை வீட்டு முகவரியை மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் சில பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டன.
முகவரியை மாற்ற விரும்பும் தனிநபர்கள் ‘இசிஓஏ’ சேவைமூலம் ‘ஃபார்ம்ஸ்எஸ்ஜி’ (FormSG) படிவத்தை நிரப்பி மாற்றலாம்.

