லெங்கோக் பாருவில் உள்ள லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவுக்கு மொட்டைக் கடிதம் ஒன்று 2012ஆம் ஆண்டு வந்தது.
அதை எழுதியவர் நீர்த்தடுப்பு, பொதுப் பணிகள் துறையில் உள்ள ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் ஊழல் வேரூன்றியிருப்பதாகக் கூறினார்.
இதையடுத்து பல மாதங்கள் கழித்து மற்ற பல கடிதங்கள் அந்தப் பிரிவுக்கு வந்தன. அதில் மேலும் தகவல்கள் அடங்கியிருந்தது.
இதை விசாரித்த லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இந்த வளையத்தில் 89 நபர்களுக்கு தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தனர்.
அவர்களில் மேலாள நிலை முகவர்கள், ஒப்பந்ததாரர்கள், நிலச் சொத்து முகவர்கள் போன்றோர் இருப்பதை அறிந்தனர்.
இவர்கள் அனைவரும் அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்திலிருந்து அறிமுகத் தொகையாக அந்த நிறுவனம் தனது நிதி ஆவணங்களில் பதிவு செய்திருந்த தொகையைப் பெற்றிருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதுவே சிங்கப்பூரில் லஞ்ச, ஊழல் விசாரணையில் ஆக அதிகமானோர் பணம் பெற்றுக்கொண்ட சம்பவமாக இருந்தது என்று அந்த விசாரணைப் பிரிவு தெரிவித்தது.
இதில் நடுநாயகமாக விளங்கியவர் அந்த நிறுவனத்தின் இயக்குநர். அவர் இப்படிச் செய்தால் பணம் பெற்றுக்கொள்பவர்கள் தனது நிறுவனத்துக்கு அதிக பணி நியமன ஆணைகளைப் பெற்றுத் தருவர் என்ற நம்பிக்கை கொண்டிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
இதனால், 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்வரை 89 நபர்களுக்கு கிட்டத்தட்ட $461,000 லஞ்சமாகக் கொடுத்தார்.
இதில் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்ட லஞ்சத் தொகை $100 முதல் $9,000 வரை இருந்ததாக விளக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு 43 வயது சிங்கப்பூர் நிறுவனத்தைச் சேர்ந்த இயக்குநர் ஒருவருக்கு 20 ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் 30 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை விதிப்பின்போது மேலும் 517 குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.