நிறுவன நலன் காக்கத் தவறும் இயக்குநர்களுக்கு அதிக அபராதம்

2 mins read
3a3ed961-2070-4363-a911-080a4838a44b
தனிநபர் தரவுப் பாதுகாப்பிற்கும் நிறுவன வெளிப்படைத்தன்மைக்கும் இடையே ஒரு சமநிலையைப் பேணுவதை ‘அக்ரா’ கவனத்தில் கொண்டுள்ளதாக அமைச்சர் இந்திராணி ராஜா குறிப்பிட்டார். - படம்: பெரித்தா ஹரியான்

நிறுவனங்களின் நலனைக் கட்டிக்காக்கத் தவறும் அல்லது போதிய முயற்சிகளை எடுக்கத் தவறும் இயக்குநர்கள் கூடுதல் அபராதத்தை எதிர்நோக்கலாம்.

தற்போது அதிகபட்சம் 5,000 வெள்ளியாக உள்ள அபராதம் $20,000ஆக உயர்த்தப்படுகிறது.

நிறுவனங்களுக்கான ஒழுங்குமுறைக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் நிறுவனங்கள் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கு நாடாளுமன்றம் புதன்கிழமை (நவம்பர் 5) ஒப்புதல் அளித்தது.

அபராதம் மட்டுமன்றி, கடுமையான குற்றமிழைப்போர்க்கு 12 மாதங்கள்வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

தற்போது, அத்தகைய குற்றவாளிகளுக்கு $5,000 வரை அபராதம் அல்லது 12 மாதங்கள்வரை சிறை விதிக்கப்படலாம்; இவ்விரு தண்டனைகளும் சேர்த்தே விதிக்கப்படுவதில்லை.

குற்றமிழைக்க வாய்ப்புள்ளோரைத் தடுக்கும் நோக்கில் தண்டனைகள் கடுமையாக்கப்படுவதாக நிதி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா குறிப்பிட்டார்.

நிறுவன, கணக்கியல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா குறித்த விவாதத்தின்போது, சட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் அவர் கோடிகாட்டினார்.

சட்டவிரோத நோக்கங்களுக்காக நிறுவனங்களைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள், பங்குதாரர்களின் நலன்களைப் பாதுகாத்தல், நிறுவனங்களுக்கான ஒழுங்குமுறைச் சுமையைக் குறைத்தல், தணிக்கைத் தொழில்துறையில் பொதுத் தணிக்கையாளர்களுக்கான தனிநபர் பொறுப்பாண்மையை ஊக்குவித்தல் போன்றவை அவற்றுள் சில.

கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையம் (அக்ரா) தனது ஒழுங்குமுறைச் செயல்பாடுகளை மறுஆய்வு செய்ததை அடுத்து இந்தச் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

புதிய சட்டத் திருத்தங்களுக்கு இணங்கி நடப்பதில் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் எதிர்கொள்ள வாய்ப்புள்ள சவால்கள் குறித்து மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்வர்ட் சியாவும் (ஹாலந்து - புக்கிட் தீமா குழுத்தொகுதி) லீ ஹோங் சுவாங்கும் (ஜூரோங் ஈஸ்ட் - புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதி) சுட்டிக்காட்டினர்.

அதற்கு, “உரிய கட்டணத்தைச் செலுத்திவிட்டு, ஒரு தனியார் நிறுவனத்தின் மின்னணுப் பதிவேட்டைப் பொதுமக்கள் பார்க்கும் வசதி ஏற்கெனவே நடப்பிலுள்ளது. இப்போது, நேரடியாகச் சென்று ஆராய்வதற்குப் பதிலாக மின்னணு முறையில் அதே தகவல்களைப் பெறுவதற்குப் புதிய சட்டத் திருத்தங்கள் வழிவகுக்கின்றன,” என்று அமைச்சர் இந்திராணி விளக்கமளித்தார்.

தனிநபர் தரவுப் பாதுகாப்பிற்கும் நிறுவன வெளிப்படைத்தன்மைக்கும் இடையே ஒரு சமநிலையைப் பேணுவதை ‘அக்ரா’ கவனத்தில் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்