அங் மோ கியோ பொது நூலகம் அமைந்துள்ள இடத்தில் சுகாதாரப் பராமரிப்பு வசதி அமைக்கப்பட உள்ளது.
2026ஆம் ஆண்டில் அங் மோ கியோ ஹப் கடைத்தொகுதிக்கு நூலகம் இடம் மாற இருக்கிறது.
அதையடுத்து, நூலகம் அமைந்துள்ள தற்போதைய இடத்தில் சுகாதாரப் பராமரிப்பு நிலையம் அமைக்கப்படும்.
அங் மோ கியோ ஹப் கடைத்தொகுதியின் நான்காவது மாடியில் அங் மோ கியோ பொது நூலகம் அமைந்திருக்கும் என்று அக்கடைத்தொகுதியை நிர்வகிக்கும் லிங்க் எசேட் மேனேஞ்மண்ட் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.
இதற்கு முன்பு கடைத்தொகுதியின் நான்காவது மாடியில் கெத்தே திரையரங்குகள் இருந்தன. அவை ஜூன் 30ஆம் தேதி மூடப்பட்டன.
அங் மோ கியோ பொது நூலகம் தற்போது அமைந்துள்ள இடம், நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் பெருந்திட்டம் 2005க்கான நகல் திட்டத்தின்கீழ் சுகாதாரம் மற்றும் மருத்துவப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் ஜூன் 25ல் வெளியிடப்பட்டது.
வரும் காலங்களில், அங் மோ கியோ வட்டாரத்தில் உள்ள அந்த 5,300 சதுர மீட்டர் நிலப்பரப்பில் மருத்துவமனை, பலதுறை மருந்தகம், பல்மருத்துவ மருந்தகம், மருந்தகம், தாதிமை இல்லம் போன்றவை கட்டப்படலாம்.
அங் மோ கியோ பொது நூலகம் இடமாற்றம் செய்யப்படுவது குறித்து ஜூலை 1ல் தேசிய நூலக வாரியம் அறிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
அங் மோ கியோ பொது நூலகம் 1985ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. 2002 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் அந்த நூலகத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடத்தப்பட்டன. நூலகத்துக்கு அருகில் அங் மோ கியோ பலதுறை மருந்தகம் உள்ளது.