வீவக: பற்றாக்குறை $6.34 பில்லியனுக்குத் தணிந்தது

2 mins read
f1ebd4af-53bf-40ea-8e86-ccff5ebcf594
சிங்கப்பூரர்களுக்குக் கட்டுப்படியான, தரமான வீடுகளைக் கொடுக்கவேண்டும் என்ற வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் கடப்பாட்டைப் பற்றாக்குறை பிரதிபலிப்பதாக அதன் தலைமை நிர்வாகி டான் மெங் டுய் தெரிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக), கடந்த நிதியாண்டில் (ஏப்ரல் 2024 - மார்ச் 2025) $6.34 பில்லியன் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது.

முந்திய நிதியாண்டின் பற்றாக்குறையான $6.775 பில்லியனைவிட அது குறைவு. வரலாறு காணாத அளவுக்குப் பற்றாக்குறை அப்போது பதிவானது. கழகம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) வெளியிட்ட வருடாந்தர அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

வீடுகள் கட்டப்பட்டதால் எதிர்பார்க்கப்பட்ட நிதியிழப்பு, வழங்கப்பட்ட மத்திய சேம நிதி வீட்டு மானியங்கள், வீட்டு உரிமைத் திட்டத்தின்கீழ் குறைந்த விலைக்கு விற்கப்பட்ட வீடுகளால் ஏற்பட்ட நட்டம் முதலியவை பற்றாக்குறையின் பெரும்பகுதிக்குக் ($5.51 பில்லியன்) காரணங்கள் என்று கழகம் தெரிவித்தது.

முந்திய நிதியாண்டில் அவற்றால் பதிவான பற்றாக்குறையின் மதிப்புடன் ($6.225 பில்லியன்) ஒப்பிடுகையில் அது ஏறக்குறைய 11.5 விழுக்காடு குறைவு.

சிங்கப்பூரர்களுக்குக் கட்டுப்படியான, தரமான வீடுகளைக் கொடுக்கவேண்டும் என்ற கழகத்தின் கடப்பாட்டைப் பற்றாக்குறை பிரதிபலிப்பதாக அதன் தலைமை நிர்வாகி டான் மெங் டுய் தெரிவித்தார். வீடுகளையும் குடியிருப்புப் பேட்டைகளையும் துடிப்பாகவும் வாழ்வதற்கு உகந்தவையாகவும் வைத்திருக்க அவற்றை மேம்படுத்த வேண்டும் என்ற கழகத்தின் உறுதியையும் அது காட்டுவதாகத் திரு டான் சொன்னார்.

2024 ஏப்ரலுக்கும் 2025 மார்ச்சுக்கும் இடையில் கிட்டத்தட்ட 23,600 தேவைக்கேற்பக் கட்டப்படும் வீடுகளைக் (பிடிஓ) கழகம் கட்டத் தொடங்கியதாக அவர் சொன்னார்.

சென்ற நிதியாண்டில் புதிய வீடுகளுக்கான சாவிகள் 17,633 உரிமையாளர்களுக்குக் கொடுக்கப்பட்டன. முந்திய நிதியாண்டில் தரப்பட்ட 19,345 வீடுகளைவிட அது குறைவு என்று அறிக்கை குறிப்பிட்டது.

இதற்கிடையே, ஏறக்குறைய $159 மில்லியனை வாடகை வீடுகளுக்காகக் கழகம் செலவிட்டது. அவற்றின் மேம்பாட்டுப் பணிகளுக்கான செலவும் அதில் அடங்கும்.

மேம்பாட்டுத் திட்டங்களுக்காக $532 மில்லியன் செலவிடப்பட்டது. முந்திய ஆண்டின் $396 மில்லியனைக் காட்டிலும் அது 34 விழுக்காடு அதிகம். இல்ல மேம்பாட்டுத் திட்டங்கள் கட்டுமானப் பணிகளின் உச்சத்தை எட்டியதே அதற்குக் காரணம். பொதுவாகச் செலவுகள் அப்போது அதிகம் இருக்கும்.

வீட்டுத் தேவைகளை நிறைவேற்ற, 2025 முதல் 2027 வரை, கிட்டத்தட்ட 55,000 புதிய வீடுகளைச் சந்தையில் அறிமுகப்படுத்தவிருப்பதாகக் கழகம் தெரிவித்தது. அவற்றில் காத்திருக்கும் நேரம் மூவாண்டுக்குக் குறைவாக இருக்கும் வீடுகளும் அடங்கும். அவ்வாறு, ஆண்டுக்கு 4,000 வீடுகள் 2026லும் 2027லும் விற்பனைக்கு வரும்.

குறிப்புச் சொற்கள்