ஆண்டு வருவாய் முன்னுரைப்பை $652 மில்லியனுக்கு உயர்த்திய கிராப்

1 mins read
b74bc9d5-97cb-4ae6-96ce-976d699ce55d
தென்கிழக்காசியாவில் போட்டியைச் சமாளிக்கப் புதிய சேவைகள் கிராபுக்குக் கைகொடுக்கின்றன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கிராப் ஹோல்டிங்ஸ் நிறுவனம், அதன் ஆண்டு வருவாய் முன்னுரைப்பை அதிகரித்திருக்கிறது.

காலாண்டு அடிப்படையில் ஈட்டிய தொகை கணிக்கப்பட்டதைக் காட்டிலும் கூடியதைத் தொடர்ந்து, நிறுவனம் ஆண்டு வருவாய் முன்னுரைப்பை உயர்த்தியுள்ளது. பகிர்வு வாடகைச் சேவை, உணவு விநியோகம் முதலியவற்றில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியது அதற்குக் கைகொடுத்துள்ளது.

வட்டி, வரி, மதிப்பிறக்கம் முதலியவற்றைத் தவிர்த்து ஆண்டு வருவாய், 490 மில்லியனிலிருந்து 500 மில்லியன் அமெரிக்க டாலர் ($652 மில்லியன்) வரை இருக்கக்கூடும் என்று கிராப் நிறுவனம் தெரிவித்தது. சிங்கப்பூரை அடித்தளமாகக் கொண்ட அந்நிறுவனம், இதற்கு முன்னர் வருவாய் 480 மில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என்று கணித்திருந்தது. ஆண்டு முழுமைக்குமான விற்பனை முன்னுரைப்பையும் அது உயர்வரம்பான 3.4 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து மாற்றவில்லை.

கிராபின் வருவாய் மூன்றாம் காலாண்டில் 22 விழுக்காடு கூடுதலாகி 873 மில்லியன் அமெரிக்க டாலரைத் தொட்டது. சராசரி வருவாய் 869 மில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என்று வல்லுநர்கள் மதிப்பிட்டிருந்தனர்.

தென்கிழக்காசியாவில் கிராபுக்கு முக்கியப் போட்டியாக விளங்குவது இந்தோனீசியாவின் ‘கோ டு’ (GoTo) நிறுவனம். இரண்டும் ஈரிலக்க வளர்ச்சியைக் கண்டாலும் அவற்றின் லாபம் குறைவாகவே உள்ளது. தானியக்க வாகனத் தொழில்நுட்பம், மின்னிலக்க நிதி உட்பட பல்வேறு புதிய முயற்சிகளில் ஈடுபடத் திட்டமிடுகிறது கிராப்.

குறிப்புச் சொற்கள்