‘பார்ட்னர் ஆப்ஸ்’ தளம் மூலம் சேவைகளை விரிவுபடுத்தும் கிராப்

2 mins read
640e3bc6-4501-4d1c-b2ae-2b19e19a9b99
கிராப் நிறுவனம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இனி கிராப் செயலி மூலம் ஈசிம் என்றழைக்கப்படும் மின் சிம் அட்டைகளை வாங்கலாம், பகிர்வு சைக்கிள்களைப் பயன்படுத்தலாம், மலேசியா செல்லப் பேருந்து நுழைவுச்சீட்டுகளுக்குப் பதிவுசெய்யலாம்.

அத்தகைய பரிவர்த்தனைகளின் மூலம் பயனர்கள் கிராப்ரிவோர்ட்ஸ் புள்ளிகளைப் பெற முடியும்.

புதன்கிழமையன்று (அக்டோபர் 22) கிராப், பார்ட்னர் ஆப்ஸ் எனும் தளத்தை அறிமுகப்படுத்தியது. அத்தளம், கிராப் மூலம் முன்றாம் தரப்புகள் வழங்கும் பொருள்களையும் சேவைகளையும் பதிவுகளையும் இணைக்கிறது.

இனி பயனர்கள் அத்தகைய முன்றாம் தரப்பு சேவைகளைப் பயன்படுத்த கூடுதல் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யத் தேவையில்லை, புதிய கணக்குகளை உருவாக்கும் அவசியம் இருக்காது. இந்த ஏற்பாட்டின் மூலம் தொலைத் தொடர்புத் தளமான ஃபர்ஸ்ட்டி (Firsty), சைக்கிள் பகிர்வுத் தளமான ஹெலோரைட், பேருந்து நுழைவுச்சீட்டுகளை விற்கும் ரெட்பஸ் உள்ளிட்டவை தங்கள் சேவைகளை வழங்கும். பார்ட்னர் ஆப்ஸ் தளத்தில் இதுபோன்ற சேவைகளை வழங்கும் மேலும் பல உள்ளூர், அனைத்துலகத் தளங்களை அறிமுகப்படுத்தத் தாங்கள் திட்மிட்டிருப்பதாக கிராப் தெரிவித்தது.

திங்கட்கிழமை முதல் பார்ட்னர் ஆப்ஸ் தளத்தின் மூலம் வழங்கப்படும் கூடுதல் சேவைகளை சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் பயன்படுத்தலாம். வரும் மாதங்களில் கிராப் செயல்படும் மற்ற சந்தைகளிலும் பார்ட்னர் ஆப்சை அறிமுகப்படுத்தத் தாங்கள் திட்டமிட்டுள்ளதாக கிராப் தெரிவித்தது.

கிராப் செயலியின் முகப்புப் பக்கத்தில் ‘பார்ட்னர்ஸ்’ எனும் அங்கத்தின் மூலம் பயனர்கள் புதிய சேவைகளைப் பயன்படுத்தலாம். அச்சேவைகளைப் பயன்படுத்த கிராப்பே வசதி வாயிலாகக் கட்டணம் செலுத்தலாம்.

கடன், டெபிட் அட்டைகள் அல்லது பேலேட்டர் போன்றவற்றின் முலம் கட்டணம் செலுத்தும் வசதிகள் வரும் மாதங்களில் சேர்க்கப்படும் என்று கிராப் குறிப்பிட்டது. கிராப் மூலம் பதிவுசெய்யப்படும் அல்லது வாங்கப்படும் மூன்றாம் தரப்புகள் வழங்கும் சேவைகள், பொருள்களின் விலைக்கும் அந்தந்த தளத்தில் அவற்றுக்கான விலைக்கும் வித்தியாசம் இருக்காது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்