கூடுதல் ‘எஸ்யுஎஸ்எஸ்’ மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் இலவசம்

2 mins read
62ddbef3-7bb4-4084-a67b-238a51f3ec45
டாக்டர் லிலின் டேயிடமிருந்து (வலமிருந்து இரண்டாவது) நன்கொடைக் காசோலையைப் பெற்றுக்கொள்ளும் எஸ்யுஎஸ்எஸ் வேந்தரும் முன்னாள் சிங்கப்பூர் அதிபருமான ஹலிமா யாக்கோப் (இடமிருந்து இரண்டாவது). மேலும், படத்தில் இருப்பவர்கள் எஸ்யுஎஸ்எஸ் தலைவர் டான் டாய் யோங் (இடது), ஃபூ சுவான் டோங் (வலது). - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் (எஸ்யுஎஸ்எஸ்) பயிலும் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த கூடுதலான மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்தத் தேவையிருக்காது.

எஸ்யுஎஸ்எஸ் அதன் நிதியுதவித் திட்டத்தை அதிகமானோருக்கு விரிவுபடுத்துவதால் இது சாத்தியமாகிறது. பகுதிநேர இளநிலைப் பட்டக் கல்வி மாணவர்களுக்கும் திட்டம் நீட்டிக்கப்படுகிறது.

இம்மாதத்திலிருந்து 1,100 வெள்ளி அல்லது அதற்கும் குறைவான தனிநபர் சராசரி வருமானம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்விக் கட்டணத்தை எஸ்யுஎஸ்எஸ் ஏற்றுக்கொள்ளும். அதற்குத் தகுதிபெற சம்பந்தப்பட்ட மாணவர்களின் ஜிபிஏ (GPA) மதிப்பெண் குறியீடு குறைந்தபட்சம் 2.0ஆக இருக்கவேண்டும்.

இதுவரை, 750 வெள்ளி அல்லது அதற்கும் குறைவான தனிநபர் வருமானத்தைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த முழுநேர மாணவர்களுக்குத்தான் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுவந்தது. மேலும், சம்பந்தப்பட்ட மாணவர்கள் நான்கரை அல்லது அதற்கும் சிறிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளில் வசித்திருக்கவேண்டும் என்பதும் நிபந்தனையாக இருந்தது.

இதுவரை 100க்கும் மேற்பட்ட முழுநேர எஸ்யுஎஸ்எஸ் மாணவர்கள் இத்திட்டத்தால் பயனடைந்துள்ளனர்.

நிதியுதவித் திட்டம் விரிவுபடுத்தப்படுவதை எஸ்யுஎஸ்எஸ் தலைவர் டான் டாய் யோங் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) அறிவித்தார். முன்னாள் கல்வியாளர்/ஆசிரியர் லிலின் டே வழங்கிய 7.5 மில்லியன் வெள்ளி நன்கொடை இதைச் சாத்தியமாக்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நிதியுதவித் திட்டம் விரிவுபடுத்தப்படுவதால் நிதி ஆதரவு தேவைப்படும் மாணவர்களுக்கும் எஸ்யுஎஸ்எஸ் உதவிக்கரம் நீட்ட முடியும் என்று பேராசிரியர் டான் விவரித்தார்.

ஆண்டுதோறும் 800க்கும் அதிகமான மாணவர்கள் இதன் மூலம் பலனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் 500க்கும் மேற்பட்டோர் முழுநேர இளநிலைப் பட்டக் கல்வி மாணவர்களாகவும் சுமார் 300 பேர் பகுதிநேர இளநிலைப் பட்டக் கல்வி மாணவர்களாகவும் இருப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிளமென்டியில் உள்ள எஸ்யுஎஸ்எஸ் வளாகத்தில் நடந்த அதன் ‘ரெய்ஸ் கார்னிவல்’ நிகழ்ச்சியில் பேராசிரியர் டான் பேசினார். அந்நிகழ்ச்சி, ஆண்டுதோறும் நடைபெற்றுவருகிறது.

நிகழ்ச்சியில் எஸ்யுஎஸ்எஸ் வேந்தரும் முன்னாள் சிங்கப்பூர் அதிபருமான ஹலிமா யாக்கோப், டாக்டர் டேயிடமிருந்து நன்கொடைக்கான காசோலையைப் பெற்றுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்