ஆயர் ராஜா விரைவுச்சாலையில் நான்கு வாகன விபத்து; நால்வர் மருத்துவமனையில்

1 mins read
fd9af6df-e09c-40b4-996b-a5512d8be5a7
இச்சம்பவம் வியாழக்கிழமை நிகழ்ந்தது. - காணொளிப் படங்கள்: Zhang Xuanbin / ஃபேஸ்புக்

ஆயர் ராஜா விரைவுச்சாலையில் நான்கு வாகன விபத்து நிகழ்ந்ததைத் தொடர்ந்து நால்வர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

ஒரு லாரி, மூன்று மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட இவ்விபத்து, வியாழக்கிழமை (ஜூன் 5) மாலை துவாசை நோக்கிய ஆயர் ராஜா விரைவுச்சாலைப் பகுதியில் நிகழ்ந்தது.

ஆண் மோட்டார் சைக்கிளோட்டிகள் மூவர், மோட்டார் சைக்கிளின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் ஆகியோர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

அவர்கள் 31லிருந்து 54 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆயர் ராஜா விரைவுச்சாலையின் பெனொய் ரோடு நுழைவாயிலுக்கு அருகே நிகழ்ந்த இந்த விபத்து குறித்து வியாழக்கிழமை மாலை 5.40 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை குறிப்பிட்டது.

சம்பவ நிகழ்வுகள் பதிவான காணொளிகள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. சம்பவ இடத்தில் குறைந்தது மூன்று அவசர மருத்துவ உதவி வாகனங்கள் இருந்தது அந்தக் காணொளிகளில் தெரிந்தது. சாலையில் படுத்துக் கிடந்த ஒருவருக்கு அவ்வழியே சென்ற சிலரும் சீருடைப் பிரிவு அதிகாரிகளும் உதவிய காட்சிகளும் காணொளிகளில் இடம்பெற்றுள்ளன.

விபத்து குறித்த காவல்துறை விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்