செம்பவாங் வட்டாரத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) நேர்ந்த சாலை விபத்து ஒன்றின் விளைவாக நால்வர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
மோட்டார்சைக்கிள், கார், வேன், மூன்று லாரிகள் என மொத்தம் ஆறு வாகனங்கள் விபத்துக்குள்ளாகின.
அட்மிரால்டி ரோடு ஈஸ்ட், டெப்ஃபோர்ட் ரோடு ஆகியவற்றுக்கு இடையிலான சந்திப்பில் காலை 7 மணியளவில் விபத்து நேர்ந்தது. அதன் காணொளிகள் எஸ்ஜி ரோட் விஜிலாண்டே (எஸ்ஜிஆர்வி), ரோட்ஸ்.எஸ்ஜி. ஆகிய ஃபேஸ்புக் பக்கங்களில் பதிவேற்றப்பட்டன.
எஸ்ஜிஆர்வி பக்கத்தில் பதிவேற்றப்பட்ட காணொளி விபத்து காலை கிட்டத்தட்ட 6.48க்கு நேர்ந்ததாகக் காண்பிக்கிறது. மூன்று தடங்கள் உள்ள சாலையின் வலக்கோடித் தடத்தில் கறுப்பு வேன் ஒன்று சிவப்பு விளக்கில் நின்றுகொண்டிருந்தபோது வாகனங்கள்மீது வேகமாக மோதியது.
வலக்கோடியில் நின்றுகொண்டிருந்த லாரிமீது வேன் மோதியதில் லாரி முன்னுக்குத் தள்ளப்பட்டது.
அதையடுத்து நிற்காமல் வேன், லாரி உள்பட மற்ற வாகனங்கள்மீது மோதியது.
ரோட்ஸ்.எஸ்ஜி. பக்கத்தில் பதிவேற்றப்பட்ட மற்றொரு காணொளியில் கறுப்பு வேன் முன்னால் இருந்த லாரியில் மோதியதில் அந்த லாரி அதற்கு முன்னால் இருந்த கறுப்பு லாரி, கார், மோட்டார்சைக்கிள்மீது மோதியது.
லாரி மோதியதில் மோட்டார்சைக்கிளோட்டி மோட்டார்சைக்கிளிலிருந்து விழுந்தார்.
தொடர்புடைய செய்திகள்
பக்கத்தில் இருந்த வேறொரு கார் ஓட்டுநர் மோட்டார்சைக்கிளோட்டிக்கு உதவினார்.
சம்பவத்தில் கறுப்பு வேனின் முன்பகுதி கடுமையாகச் சேதமடைந்தது.
மோட்டார்சைக்கிளோட்டியும் சாலை ஓரம் படுத்திருந்ததைக் காணொளியில் காண முடிகிறது.
விபத்து குறித்து காலை 6.50 மணியளவில் தகவல் கிடைத்ததைக் காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
சம்பவ இடத்துக்கு வந்த சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் மீட்புக் கருவிகளைக் கொண்டு லாரி ஓட்டுநரையும் வேன் ஓட்டுநரையும் அவர்களின் வாகனங்களிலிருந்து மீட்டு வெளியே எடுத்தனர்.
பாதிக்கப்பட்ட நால்வரும் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குச் சுயநினைவுடன் கொண்டுசெல்லப்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
மோட்டார்சைக்கிளோட்டிய ஆடவருக்கு வயது 56. வேன் ஓட்டிய ஆடவருக்கு வயது 38. 71 வயது லாரி ஓட்டிய ஆடவரும், அவருடன் பயணம் செய்த 42 வயது ஆடவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
காவல்துறை அதிகாரிகளின் விசாரணை தொடர்கிறது.

