தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேண்டுமென்றே குழந்தையைக் கீழே விழச்செய்த முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியர்

2 mins read
32bb9d4a-f27d-416f-874b-49f887b0f162
நீதிமன்றத்தில் சைதா கமரூதீன், 34. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 மாதப் பெண் குழந்தையை வேண்டுமென்றே நான்கு முறை கீழே விழச்செய்துள்ளார் முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியர்.

சைதா கமரூதீன், 34, என்னும் அந்தப் பெண் செய்த தவற்றால் ஒரு முறை குழந்தையின் மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தமும் வந்தது.

தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை சைதா செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) ஒப்புக்கொண்டார்.

சைதா எந்தப் பாலர் பள்ளியில் பணியாற்றினார் என்பது தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை.

2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சைதா, இந்தத் துன்புறுத்தல் செயல்களில் ஈடுபட்டதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்து.

சைதா, அந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாலர் பள்ளி ஆசிரியர் பணியிலிருந்து விலக முடிவு செய்த பிறகு துன்புறுத்தல் செயலில் ஈடுபட்டார்.

அந்த ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி சைதா குழந்தைகளுடன் விளையாட்டுப் பகுதியில் இருந்தார்.

பிற்பகல் 12.30 மணிவாக்கில் பாதிக்கப்பட்ட குழந்தையின் முகத்தைக் கழுவுவதற்காக அவர் கழிவறைக்குக் கூட்டிச் சென்றார்.

அப்போது சைதா தமது கால்களைப் பயன்படுத்தி குழந்தையைக் கீழே தள்ள முயற்சி செய்தார். குழந்தை நிலை தடுமாறியது. ஆனால் கீழே விழவில்லை.

மீண்டும் அதேபோல் சற்று வேகமாக சைதா அக்குழந்தையிடம் நடந்துகொண்டார். இம்முறை குழந்தை கீழே விழுந்தது.

அதன் பின்னர் கழிவறையிலிருந்து வெளியே நடந்து சென்று கொண்டிருந்தபோது மீண்டும் குழந்தையின் கால்களை சைதா தட்டிவிட்டார். குழந்தை நிலை தடுமாறியது. ஆனால் கீழே விழவில்லை.

அதன்பின்னர் சற்று வேகமாகக் குழந்தையின் கால்களை சைதா தட்டிவிட்டார். இம்முறை குழந்தை முன்னோக்கி கீழே விழுந்தது. முகத்தில் அடிப்பட்டதால் வலியால் குழந்தை அழுதது.

குழந்தை அழுவதைக் கேட்ட மற்றொரு ஆசிரியர் அந்த இடத்திற்கு வந்தார். அப்போது குழந்தையின் மூக்கிலிருந்து ரத்தம் வந்தது. முகத்தில் வீக்கமும் இருந்தது.

அதன் பின்னர் குழந்தையின் பெற்றோர் காவல்துறையில் புகார் கொடுத்தனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சைதா குழந்தையைக் கீழே தள்ளிவிடுவது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்தது.

அதன் பின்னர் சைதா கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

சைதாவுக்கு ஜூலை 28ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்