தெங்காவில் உள்ள கட்டுமானத் தளம் ஒன்றில் திங்கட்கிழமை (நவம்பர் 17) பிற்பகல் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உயரத்திலிருந்து விழுந்து உயிரிழந்தார்.
எண் 6 பிளாண்டேஷன் குளோசில் நிகழ்ந்த அச்சம்பவம் குறித்து அன்று பிற்பகல் 3.35 மணிக்குத் தகவல் கிடைத்ததாகவும் அந்த 26 வயது ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையி தெரிவித்தது.
அந்த ஆடவர், தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு ஊராட்சி சேர்வைகாரன்பட்டியைச் சேர்ந்த விவசாயிகளான மதியழகன் - சகுந்தலா தம்பதியின் மகன் செந்தூரன் என தமிழக ஊடகமான ‘நக்கீரன்’ தெரிவித்தது.
தொழிற்கல்வி பட்டயப் படிப்பை முடித்த செந்தூரன், தம் குடும்பச் சூழ்நிலையைக் கருதி ஐந்து மாதங்களுக்கு முன்புதான் சிங்கப்பூருக்குப் பணியாற்ற வந்ததாகவும் இங்கு தனியார் கட்டுமான நிறுவனத்தில் கட்டுமான ஊழியராக அவர் பணிபுரிந்து வந்ததாகவும் ‘நக்கீரன்’ கூறியது.
கனமழை பெய்துகொண்டிருந்தபோது வேலைச் சீருடை அணிந்தபடி செந்தூரன் தரையில் விழுந்து கிடப்பதைக் காட்டும் புகைப்படத்தையும் அது பற்றிய தகவலையும் சமூக ஆர்வலர் சுரேஷ்குமார் ஆறுமுகம் ஃபேஸ்புக்கில் பகிர்ந்தார்.
பிளாண்டேஷன் குளோசில் நோவோ பிளேஸ் @ தெங்கா எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்தோர் தமிழ் முரசைத் தொடர்புகொள்ளவும். இதுபற்றி மனிதவள அமைச்சைத் தமிழ் முரசு தொடர்புகொண்டுள்ளது.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.

