சிங்கப்பூரின் உணவுப் பாதுகாப்புக்கு அதனைச் சேமிப்பது முக்கியமானது. நாட்டின் மீள்தன்மைக்கான உறுதுணைகளில் அதுவும் ஒன்றே தவிர விலைகளை நிர்ணயிப்பதற்கல்ல என நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (நவம்பர் 6) தெரிவித்தார்.
அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விநியோகம் தடைப்படும்போது, நிலைமையைத் தாக்குப்பிடிக்கும் அரணாக அவற்றின் சேமிப்பு செயல்படும் என்றார் அவர். மார்சிலிங் - இயூ டீ குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேனி சோ, விநியோக மாற்றங்களால் சேமிக்கப்பட்ட உணவின் விலைகள் நிர்ணயிக்கப்படுமா என்று கேட்டதற்கு தற்காப்பு மூத்த துணை அமைச்சருமான ஸாக்கி அவ்வாறு பதிலளித்தார்.
இறக்குமதியை பலவகைப்படுத்துதல், உள்ளூர் உற்பத்தி, உலகளாவிய கூட்டுறவு, உணவு சேமிப்பு ஆகிய அனைத்தும் சிங்கப்பூரின் நான்கு வகை உணவுப் பாதுகாப்பு உத்திகள் என்பதை அமைச்சர் விளக்கினார்.
தற்போதுள்ள சட்டப்படி, அரிசியை மட்டும் சேமித்து வைக்கலாம். இருப்பினும், குடியரசு அரிசி உட்பட பதப்படுத்தப்பட்ட புரதங்கள், காய்கறிகள் போன்றவற்றைச் சேமித்து வைத்துள்ளது.
மாற்றுப் புரதங்களை வழங்கும் செடிகள் சார்ந்த அல்லது ஆய்வுக்கூடங்களில் தயாரிக்கப்பட்ட இறைச்சி வகைகள் உணவு இருப்புகளின் அங்கமாக இல்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார். வர்த்தகர்களுக்கும் வியாபாரிகளுக்கும் உதவிட உணவு சேமிப்புகளைப் பயன்படுத்துவதை அரசாங்கம் பரிசீலிக்குமா எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேனி சோ கேட்டிருந்தார்.
உணவு சேமிப்பும் அதன் விலை நிர்ணயமும் இருவேறு நிலைகளில் கையாளப்படவேண்டியவை. எனவே சிங்கப்பூரில் நிலவும் உணவு விலைகளைச் சேமிப்பில் உள்ள இருப்புகளை வைத்து நிர்ணயிப்பது முறையாகாது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
உணவுக் கழிவுகள் உட்பட சேமிப்பு எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பதைப் பற்றி, வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கேள்விகள் எழுப்பியிருந்தனர். உணவுக் கழிவுகளைக் கட்டுப்படுத்தி, சேமிக்கப்படும் உணவுகள் உட்கொள்வதற்குப் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய தனியார் நிறுவனங்களுடன் அரசாங்கம் ஒருங்கிணைந்துள்ளது. சில நேரங்களில் நன்கொடைகளுக்கும் சேமிக்கப்பட்ட உணவு பயன்படுவதை அமைச்சர் குறிப்பிட்டார்.

