சிங்கப்பூர் முழுவதும் வெள்ளக் கண்காணிப்பை மேம்படுத்தும் நோக்கில் 2028ஆம் ஆண்டுக்குள் 600க்கும் அதிகமான நீர்மட்ட உணர்கருவிகள் பொருத்தப்படும் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.
திடீர் வெள்ளம் தொடர்பான தயார்நிலையை அதிகரிப்பதற்கான மேலும் சில நடவடிக்கைகள் குறித்தும் திங்கட்கிழமை (நவம்பர் 17), அது தகவல் வெளியிட்டது.
வெள்ள எச்சரிக்கையை ‘கூகல் மேப்ஸ்’ உடன் ஒருங்கிணைத்தல், கனமழையை மேம்பட்ட முறையில் முன்கூட்டியே கணிக்க கைத்தொலைபேசிச் சமிக்ஞைகளைப் பயன்படுத்துதல் போன்றவை அவற்றில் அடங்கும்.
வருடாந்தர வெள்ள விழிப்புணர்வுப் பிரசார இயக்கத்தின் தொடக்கத்தில் கழகம் இது குறித்து அறிவித்தது.
மழைக்காலத்திற்கு முன்னதாக இடம்பெறும் இத்தகைய முதல் விழிப்புணர்வுப் பிரசார இயக்கம் 2024ஆம் ஆண்டில் அறிமுகமானது.
சிங்கப்பூரில் வடகிழக்குப் பருவக்காற்றால் ஆண்டிறுதியில் மழை பெய்வது வழக்கம். வானிலை ஆய்வகம், திங்கட்கிழமை வெளியிட்ட முன்னுரைப்பில் வடகிழக்குப் பருவமழைக்காலம் இந்த மாத இறுதிவாக்கில் தொடங்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 15 நாள்களுக்கு மழைப்பொழிவு சராசரிக்கும் அதிகமான அளவில் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வேளையில், சாக்கடைகளிலும் வடிகால்களிலும் 2028ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 650 நீர்மட்ட உணர்கருவிகள் பொருத்தப்படும் என்று கழகம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதனால், குறிப்பிட்ட ஒரு சாலையில் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டால் அங்கு நிலைமையைச் சமாளிக்க, உடனடி நடவடிக்கை வாகனத்தை விரைந்து அனுப்ப முடியும் என்று கழகம் சொன்னது.
புதிதாகப் பொருத்தப்படும் உணர்கருவிகள் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள 1,000க்கும் மேற்பட்ட உணர்கருவிகள், 500க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், மழைப்பொழிவை அளக்கும் கருவிகள் போன்றவற்றுடன் இணைந்து செயல்படும். இந்த உணர்கருவிக் கட்டமைப்பு, நாட்டின் முக்கிய நீர்நிலைகளிலும் கால்வாய்களிலும் நீர்மட்டம் அணுக்கமாகக் கண்காணிக்கப்படுவதை உறுதிசெய்யும்.
“மேம்படுத்தப்பட்ட வெள்ளக் கண்காணிப்புத் திறன், வெள்ளம் ஏற்படக்கூடிய சூழலில் பொதுமக்களுக்குத் துல்லியமான எச்சரிக்கைகளை விடுக்க உதவும். இதனால் அவர்கள் மேம்பட்ட முறையில் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளவும் வெள்ளத்தைச் சமாளிக்கவும் முடியும்,” என்று கழகம் கூறியது.
மேலும், வெள்ள எச்சரிக்கைகளை ‘கூகல் மேப்ஸ்’ உடன் ஒருங்கிணைப்பது தொடர்பில் கூகல் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதாக அது குறிப்பிட்டது. மழை நாள்களில் வாகனவோட்டிகளும் பயணிகளும் வெள்ளம் குறித்த தகவல்களைப் பெற்று, தங்கள் பயணப் பாதையைத் திட்டமிட இது கைகொடுக்கும் என்று கழகம் சொன்னது.

