ஜூரோங் வட்டாரப் பாதைக்கான முதல் ரயில் சிங்கப்பூர் வந்தடைந்தது

2 mins read
5bddfa56-aed6-4811-86f4-04ccb6ca5f05
சேவைக்குத் தயார்ப்படுத்தும் விதமாக ரயில் தெங்கா பணிமனையில் சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். - படங்கள்: நிலப் போக்குவரத்து ஆணையம்/ஃபேஸ்புக்

ஜூரோங் வட்டாரப் பாதைக்கான முதல் ரயில் சிங்கப்பூர் வந்தடைந்துள்ளது.

சிங்கப்பூரின் ஏழாவது பெருவிரைவு ரயில் பாதைக்காகத் தென்கொரியாவில் தயாரிக்கப்படும் 62 ரயில்களில் அதுவும் ஒன்று.

ஒவ்வொரு ரயிலிலும் மூன்று பெட்டிகள் இருக்கும் என்றும் பின்னர் பயணிகளின் தேவையைப் பொறுத்து நான்கு பெட்டிகள் இணைக்கப்படக்கூடும் என்றும் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூரோங் வட்டாரப் பாதை 24 கிலோமீட்டர் நீளம் கொண்டிருக்கும்.

புதிய ரயில்களில் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோர்க்கும் பிள்ளைகளுக்கான தள்ளுவண்டிகளைப் பயன்படுத்துவோர்க்கும் உதவும் விதமாகக் கூடுதல் இடவசதியுடனும் அகலமான கதவுகளுடனும் பெட்டிகள் அமைந்திருக்கும்.

பெட்டிகளுக்குள் கூடுதல் இடவசதி இருந்தபோதும் ஜூரோங் வட்டாரப் பாதையில் மேம்பட்ட முறையில் இயக்கக்கூடிய வகையில் அந்தப் பெட்டிகள் அளவில் சிறியவை என்றும் ஆணையம் வியாழக்கிழமை (செப்டம்பர் 25) தன் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

எஞ்சிய 61 ரயில்களும் இப்போதிலிருந்து 2028ஆம் ஆண்டு வரை சிங்கப்பூர் வந்தடையும் என்று கூறப்பட்டது.

ஜூரோங் வட்டார ரயில் பாதை 2027ஆம் ஆண்டுக்கும் 2029ஆம் ஆண்டுக்கும் இடையே கட்டங்கட்டமாகச் சேவை வழங்கத் தொடங்கும்.

இவ்வேளையில், இங்கு வந்தடைந்துள்ள முதல் ரயில், சேவைக்குத் தயாராகும் விதமாக தெங்கா பணிமனையில் சோதனைகளுக்கு உட்படுத்தப்படவிருக்கிறது.

ஜூரோங் வட்டாரப் பாதையில் 24 ரயில் நிலையங்கள் அமைந்திருக்கும். அவற்றில் நிலத்தடி நிலையம் எதுவும் இல்லை. எஸ்பிஎஸ் டிரான்சிட் ரயில் நிறுவனத்துடன் ‘ஆர்ஏடிபி டேவ் ஏஷியா பசிபிக்’(RATP Dev Asia Pacific) எனும் பிரெஞ்சுப் போக்குவரத்து நிறுவனமும் இணைந்து இந்த ரயில் பாதையை நிர்வகிக்கவிருக்கின்றன. சிங்கப்பூர் ரயில் துறையில் வெளிநாட்டு நிறுவனமொன்று ஈடுபடுவது இதுவே முதன்முறையாகும்.

கடந்த மார்ச் மாதம், போக்குவரத்து அமைச்சின் வரவுசெலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தின்போது அப்போதைய போக்குவரத்து அமைச்சரான திரு சீ ஹொங் டாட், ஜூரோங் வட்டாரப் பாதையை குறுக்குத் தீவு ரயில்பாதையுடனும் வட்ட ரயில்பாதையுடனும் இணைக்கும் விரிவாக்கப் பணிகள் குறித்து அறிவித்திருந்தார்.

‘வெஸ்ட் கோஸ்ட்’ விரிவாக்கம் எனும் அத்திட்டத்தின் முதற்கட்டத்தின்கீழ், ஜூரோங் வட்டாரப் பாதையின் பாண்டான் ரிசெர்வோர் நிலையம் குறுக்குத் தீவு ரயில்பாதையின் வெஸ்ட் கோஸ்ட் ரயில் நிலையத்துடன் இணைக்கப்படும். அந்தப் பணிகள் 2030களின் பிற்பகுதியில் நிறைவடையும்.

இரண்டாம் கட்டத்தில், வட்ட ரயில்பாதையின் கென்ட் ரிட்ஜ் நிலையத்துடன் வெஸ்ட் கோஸ்ட் நிலையம் இணைக்கப்படும். அந்தப் பணிகள் 2040களின் தொடக்கத்தில் நிறைவுறும்.

குறிப்புச் சொற்கள்