மோசடிகளுக்கு எதிரான தற்காப்பு தனிமனிதரிலிருந்து தொடங்குகிறது. மோசடிகளில் சிக்கிக்கொள்ளும் சாத்தியம் அனைவருக்கும் உண்டு.
கிட்டத்தட்ட ஐந்தில் நான்கு அல்லது ஏறக்குறைய 80 விழுக்காட்டு மோசடிச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களே மோசடிக்காரர்களுக்குப் பணத்தை மாற்றிவிடுகின்றனர்.
உள்துறைத் துணையமைச்சர் கோ பெய் மிங், தேசிய அளவில் சனிக்கிழமை (நவம்பர் 8) தொடங்கப்பட்ட முதல் சாலைக்காட்சியில் அதனைத் தெரிவித்தார்.
பொதுமக்கள் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் அதனைப் பார்த்துவரலாம். தோ பாயோவில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக நடுவத்தின் முற்றத்தில் சாலைக்காட்சி காலை பத்து மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை நடைபெறும்.
“மோசடிகளுக்கு எதிராக நாம் செயல்படலாம்,” என்ற முழக்கவாசகத்துடன் சாலைக்காட்சி நடைபெறுகிறது. உள்துறை அமைச்சும் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சும் அதற்கு ஏற்பாடு செய்துள்ளன.
சாலைக்காட்சியில், மேடை நிகழ்ச்சிகள், இருவழித் தொடர்புக் கண்காட்சிகள், விளையாட்டுகள், விழிப்புணர்வு நடவடிக்கைகள் எனப் பல அம்சங்கள் உண்டு.
மோசடிக்காரர்கள், மக்களை ஏமாற்ற மனோவியல் ரீதியிலான தந்திரங்களைப் பயன்படுத்துவதாகத் திரு கோ கூறினார். பாதிக்கப்பட்டோர் மோசடிக்காரர்களின் வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை அனுப்பிவிடுவதாக அவர் சொன்னார்.
“அதனால்தான் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அவற்றின் மூலம் அனைவரும் விழிப்புடன் இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம்,” என்றார் திரு கோ.
தொடர்புடைய செய்திகள்
சாலைக்காட்சியில் பல்வேறு அரசாங்க அமைப்புகளும் சமூகப் பங்காளித்துவ அமைப்புகளும் பங்கெடுக்கின்றன.
மோசடிச் சம்பவங்கள் குறித்துப் பொதுமக்கள் விழிப்புடன் இருப்பதற்குச் சாலைக்காட்சி ஊக்குவிக்கிறது.
அவர்கள் சந்தேகத்திற்குரிய தொலைபேசி அழைப்புகள் அல்லது தகவல்கள் எனக் கருதினால் அவற்றைச் சரிபார்ப்பது நல்லது.
மோசடி எனச் சந்தேகம் எழுந்தால் உடனே அருகில் இருப்போரிடமும் காவல்துறையிடமும் அதனைத் தெரியப்படுத்த வேண்டும்.
உள்துறை அமைச்சும் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சும் சனிக்கிழமை (நவம்பர் 8) வெளியிட்ட கூட்டறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
மோசடிகளைத் தடுப்பதில் தனிமனிதர்களின் பங்கு முக்கியமானது என்று அவை குறிப்பிட்டன.

