ஜாலான் புசாரில் உள்ள ஒரு கடைவீட்டில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
எண் 85 மௌட் சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக அன்றிரவு 7.30 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
இரண்டு மாடிகள் கொண்ட அந்தக் கடைவீட்டின் முதல் தளத்தில் இருந்த சமையலறையில் இருந்த பொருள்கள் தீப்பிடித்ததாக குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றடைவதற்குள், பொதுமக்கள் ஏற்கெனவே ஒரு நீர்க்குழாய், ஒரு தீயணைப்புக் கருவி மூலம் தீயை அணைத்துவிட்டனர்.
ஒருவர், டான் டோக் செங் மருத்துவமனைக்கும் மற்றொருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கும் கொண்டுசெல்லப்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
கடைவீட்டின் முதல் தளத்தில் முன்பு ‘கோஃப்ரீலி’ என்ற காப்பிக் கடை வாடகைக்கு இருந்தது. ஆனால், அது அண்மை மாதங்களாக மூடப்பட்டுள்ளது. கடை மூடப்பட்டது குறித்து ஜூன் மாதம் தனது சமூக ஊடகத் தளங்களில் அது அறிவித்திருந்தது.
கூகல் வரைபடத்தின்படி, கடைவீட்டின் இரண்டாவது மாடியில் மூன்று உட்புற வடிவமைப்பு நிறுவனங்கள் அமைந்துள்ளன.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக குடிமைத் தற்காப்புப் படை கூறியது.