சாய் சீ அவென்யூவில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் 31ல் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீயினால் பாதிக்கப்பட்ட நால்வர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். கிட்டத்தட்ட 50 குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) இரவு 11.05 மணி அளவில் தீச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
“எட்டாவது மாடியில் இருந்த வீடொன்றின் வரவேற்பறை தீப்பற்றி எரிந்தது. தண்ணீர் பீய்ச்சி தீ அணைக்கப்பட்டது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சென்றபோது வீட்டில் எவரும் இல்லை,” என்று அது கூறியது.
அண்டை வீடுகளில் இருந்த மூவரும் தீயணைப்பு வீரர் ஒருவரும் புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மூன்றாமவரும் தீயணைப்பு வீரரும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீ ஏற்பட்ட புளோக்கில் இருந்து கிட்டத்தட்ட 50 பேர் வெளியேற்றப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
தீ மூண்டதற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு உதவியதற்காக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, ஈஸ்ட் கோஸ்ட் நகர மன்றக் குழு, அடித்தளத் தொண்டூழியர்களுக்கு ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டான் கியாட் ஹாவ் நன்றி தெரிவித்தார்.
அவர்கள் மூத்தோர் ஓய்வெடுக்க குடியிருப்பாளர் நிலையத்தைத் திறந்து வைத்ததாகவும் பானங்கள், சிற்றுண்டிகள் போன்றவற்றை வழங்கியதாகவும் நடமாட்டப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு உதவியதாகவும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மின்சாரம், தண்ணீர் சேவைகளை மீண்டும் வழங்க நகர மன்றக் குழு உடனடியாகச் செயல்பட்டதுடன், பொது இடங்களை சுத்தம் செய்வும் உதவின,” என்றார் அவர். அடுக்குமாடியின் வெளிப்புறத்துக்கு மீண்டும் சாயம் பூசப்படும் என்றும் அவர் சொன்னார்.
வீடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள குடியிருப்பாளர்களுக்குத் தற்காலிக தங்குமிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திரு டான் கூறினார்.

