தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாதசாரிகள் மட்டுமே செல்லும் பாதையில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு அபராதம், சிறை

2 mins read
94553bf0-6a13-4bb2-9b9e-a763cf633279
சைக்கிளோட்டிகளின் பாதைகளைப் பயன்படுத்தும் பாதசாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படாது என நிலப்போக்குவரத்து ஆணையம் கூறியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் முழுதும் அமைந்துள்ள பாதசாரிகள் மட்டுமே செல்லும் வழித்தடங்களைப் பயன்படுத்தும் சைக்கிளோட்டிகளுக்கும் மோட்டார் பொருத்தப்படாத தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்துவோர்க்கும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) முதல் தண்டனை விதிக்கப்படலாம்.

பாதசாரிகள், நடமாட்டச் சிரமங்கள் உள்ளோர் செல்லும் மின் சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் மட்டுமே அந்தப் பாதைகளில் அனுமதிக்கப்படுவர்.

மேலும், அதில் ‘பாதசாரிகளுக்கு மட்டும்’ என்ற வார்த்தை எழுதப்பட்டிருக்கும்.

சைக்கிளோட்டிகள் செல்லும் வழித்தடங்கள் சிவப்பு நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டிருக்கும்.

சைக்கிளோட்டிகளும் மோட்டர் பொருத்தப்படாத தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்துபவர்களும் பகிரப்பட்ட நடைபாதைகளில் அனுமதிக்கப்படுவர்.

ஜூலை 1ஆம் தேதி முதல் பாதசாரிகள் மட்டுமே செல்லும் பாதைகளையும் சைக்கிளோட்டிகளின் வழித்தடங்களையும் மக்கள் முறையாகப் பயன்படுத்த வேண்டும் என நிலப் போக்குவரத்து ஆணையம் வலியுறுத்தியது.

மூத்தோர், பிள்ளைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த அமலாக்க நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அது சொன்னது.

பாதசாரிகள் மட்டுமே செல்லும் பாதையில் வாகனத்தை ஓட்டியது தொடர்பாக முதல்முறை குற்றம் புரிபவர்களுக்கு $2,000 வரை அபராதம் அல்லது 3 மாதங்கள்வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

அதேநேரத்தில், சைக்கிளோட்டிகளின் பாதைகளைப் பயன்படுத்தும் பாதசாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படாது என்றும் இருப்பினும் அவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பாதசாரிகள் மட்டுமே செல்லும் பாதைகளைப் பயன்படுத்துமாறு அறுவுறுத்தப்படுவதாகவும் ஆணையம் கூறியது.

குற்றம் நடந்ததா என்பதை உறுதிசெய்ய, பரிசீலிக்கப்பட்ட சில அணுகுமுறையை அமலாக்க அதிகாரிகள் மேற்கொள்வர் என அது தெரிவித்தது.

பாதைகளில் வேகமாகவோ அல்லது பொறுப்பற்ற முறையிலோ வாகனம் ஓட்டுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என ஆணையம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்