நிதி விவகாரம்: சிங்கப்பூர் குடும்பங்கள் கவனமாக இருக்க மத்திய வங்கி வலியுறுத்து

2 mins read
1571dd5e-68e2-420b-8a55-874e40e10703
சிங்கப்பூர்க் குடும்பங்கள் சொத்து வாங்குவது உள்ளிட்ட நிதிக் கடப்பாடுகளில் கவனமாகச் செயல்பட வேண்டும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் கூறியுள்ளது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூக் குடும்பங்கள் தற்போதைக்கு குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் பெற முடியும். இருந்தாலும், தற்போதைய நிச்சயமற்ற சூழலைக் கருத்தில் கொண்டு நிதிக் கடப்பாடுகளில் கவனமுடன் செயல்படுமாறு மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.

சிங்கப்பூர் நாணய ஆணையம் புதன்கிழமை (நவம்பர் 5) தனது வருடாந்திர நிதி நிலைத்தன்மைப் பரிசீலனையில் இவ்வாறு கேட்டுக்கொண்டது.

“சிங்கப்பூர்க் குடும்பங்கள் சொத்து வாங்குவது உட்பட பெரிய அளவிலான நிதிக் கடப்பாடுகளில் விவேகத்துடன் திட்டமிட வேண்டும்,” என்று ஆணையம் குறிப்பிட்டது.

புழக்கத்திற்குத் தேவையான பணத்தை வைத்திருக்க வேண்டும் என்ற ஆணையம், நிச்சயமற்ற சூழலால் ஊழியர் தேவையும் ஊதிய வளர்ச்சியும் மெதுவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறியது.

ஏற்கெனவே நிலுவையில் உள்ள வீட்டுக் கடன்கள் உயர்ந்துள்ள நிலையில், வீட்டுக்கடனைவிட வீட்டுச் சொத்துகள் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளதால் ஒட்டுமொத்த பாதிப்பு குறைவாகவே இருப்பதாக நாணய ஆணையம் மேலும் கூறியது.

“ஒரு விழுக்காட்டுக் குடும்பங்களே எதிர்மறையான பணப்புழக்கத்தை எதிர்கொள்ளக்கூடும். இதில் பாதிக்கப்படக்கூடிய பெரும்பாலோர் நடுத்தர வயதுடையவர்கள். குறைந்த வருமானம் கொண்ட வீவக குடியிருப்பாளர்களும் கணிசமாக நிலுவையில் உள்ள தனியார் வீட்டுக் கடன்களைக் கொண்ட மேல்மட்ட நடுத்தர வருமானப் பிரிவினர்களும் இதில் அடங்குவர்,” என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

நிலையான தனியார் வீட்டுச் சந்தையை உறுதிசெய்யும் நோக்கத்துடன் வளர்ச்சியடைந்து வரும் சந்தை முன்னேற்றங்களில் அரசாங்கம் விழிப்புடன் இருக்கும் என்று அது கூறியது.

2025ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வீட்டுக் கடன் ஆண்டுக்கு ஆண்டு 6.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஆனால், வீட்டு நிதிச் சொத்துகள் 8.5 விழுக்காடு வேகமாக வளர்ச்சியடைந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்