சின் சுவீ ரோட்டில் ஏற்பட்ட சண்டையில் தொடர்புடைய 56 வயது ஆடவர் சனிக்கிழமை (நவம்பர் 8) அதிகாலை உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சம்பவம் தொடர்பாக ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்குக் காவல்துறை பதிலளித்தது.
புளோக் 51, சின் சுவீ ரோட்டில் இருந்து அதிகாலை 3.10 மணியளவில் உதவிகேட்டு தங்களுக்கு அழைப்பு வந்ததாகக் காவல்துறை கூறியது.
காவல்துறையினர் விரைந்து சென்றபோது அந்த புளோக்கில் உள்ள வீடு ஒன்றின் வெளியே காயங்களுடன் ஆடவர் ஒருவர் விழுந்து கிடந்தார்.
சுயநினைவிழந்த நிலையில் அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. பின்னர் அவர் மருத்துவமனையில் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர் கத்தியால் குத்தப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
கைகலப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை கூறியது.
அவர்கள் 36 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்களில் இருவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்படும் எனத் தெரிகிறது.
நான்கு பேர் தகராற்றில் ஈடுபட்டதாகவும் அது பின்னர் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஆடவரின் இறப்பை கொலை என்று வழக்குப் பதிவு செய்த காவல்துறை, அது தொடர்பான விசாரணையில் இறங்கி உள்ளது.
சம்பவம் நடைபெற்ற புளோக்கில் உள்ள வீடுகள் அனைத்தும் ஓரறை வீடுகள் என்று சொத்து நிறுவனம் ஒன்றின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

