சுரங்கப்பாதை அமைக்கும் பணியின்போது, ஃபேரர் ரோட்டின் ஒரு பகுதி இடிந்ததால், அங்கு புதைகுழி ஏற்பட்டது.
2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அச்சம்பவத்திற்குக் காரணமாகச் சொல்லப்படும் பணியிடக் குறைபாடுகளை ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் மூன்று ஆடவர்கள்மீதும் கட்டுமான நிறுவனம்மீதும் மொத்தம் 11 குற்றச்சாட்டுகள் வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 21) சுமத்தப்பட்டன.
சம்பவத்தின்போது அச்சாலையில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால், உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்படவில்லை.
அந்தப் பகுதியில் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரம் ஒன்று பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அதற்கு அருகே இருந்த சாலை இடிந்தது. இதனால், ஹாலந்து ரோட்டிலிருந்து ஃபேரர் ரோட்டுக்குச் செல்லும் இணைப்புச் சாலையில் புதைகுழி ஏற்பட்டதாகக் கட்டட, கட்டுமான ஆணையம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
அங்குச் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஜப்பானிய நிறுவனமான ‘நிஷிமாட்ஸ் கன்ஸ்ட்ரக்சன்ஸ்’ மீது கட்டடக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சுரங்கப்பாதை பணியைத் தொடர்ந்து கண்காணித்து மதிப்பாய்வு செய்ய அந்நிறுவனம் தவறியதாகச் சொல்லப்படுகிறது.
55 வயது கோ சா மெய்ன், கட்டடக் கட்டுப்பாட்டு விதிமுறைகளின்கீழ் ஒரு குற்றச்சாட்டையும் கட்டடக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ் இரு குற்றச்சாட்டையும் எதிர்நோக்குகிறார்.
இரண்டாவது நபரான 58 வயது காம் முன் வாய்மீது கட்டடக் கட்டுப்பாட்டு விதிமுறைகளின் கீழ் ஒரு குற்றச்சாட்டும் மூன்றாவது நபரான 67 வயது கோ லுவான் போக்மீது கட்டடக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ் ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டன.

