2026ஆம் ஆண்டை வரவேற்க தீவெங்கும் உற்சாகம்

3 mins read
பல நினைவுகளைத் தந்த 2025ஆம் ஆண்டு ஒரு முடிவுக்கு வர இன்னும் ஒரு சில வாரங்களே எஞ்சியுள்ளது. தீவின் பல பகுதிகள் 2026ஆம் ஆண்டை உற்சாகத்துடன் வரவேற்க இப்போதே தயாராகிவருகின்றன. ஒன் கவுண்டௌன் 2026 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகத் தீவெங்கும் பல்வேறு கொண்டாட்டங்களும் வாணவேடிக்கைகளும் இடம்பெறும் என்று கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
b34e63b1-5583-4905-add0-f2daf3578791
சிங்கப்பூர் முழுவதும் 2026ஆம் ஆண்டை வரவேற்க மும்முரமான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. - படம்: சிங்கப்பூர் விளையாட்டு நடுவம்

மரினா பே, செந்தோசா. டிசம்பர் 31ஆம் தேதி இரவு எப்போதும் பரப்பரப்பாக இருக்கும் அந்த இரண்டு பகுதிகளிலும் இவ்வாண்டும் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை.

மரினா பே

மரினா பே சிங்கப்பூர் கவுண்டௌன் 2026இல் பல விழாக்கள் இடம்பெறுகின்றன.

டுகெதர்லேண்ட் பை வர்ல்ட் கிறிஸ்துமஸ் மார்க்கெட் (Togetherland by World Christmas Market) பொழுதுபோக்குத் தளம், எஸ்பிளனேட்டில் நேரடி நிகழ்ச்சிகள் ஆகியவையும் இதில் அடங்கும்.

மரினா பே வட்டாரத்தில் இடம்பெறும் ஆர்க்கிட் வடிவில் உள்ள வாணவேடிக்கை.
மரினா பே வட்டாரத்தில் இடம்பெறும் ஆர்க்கிட் வடிவில் உள்ள வாணவேடிக்கை. - படம்: ஜோஜோ லாவ்

ஃபுல்லர்ட்டன் ஹோட்டலும் பல வண்ணங்களில் மக்களைக் கிரங்கவைக்கவிருக்கிறது. உடற்குறையுள்ளோரால் உருவாக்கப்பட்ட காட்சிகள் பிரைட்டனிங் லைஃப்ஸ் என்ற ஒளிவிளக்குப் படைப்புகளாக ஃபுல்லர்ட்டன் ஹோட்டலில் வண்ணக் கோலமிடும்.

சரியாக நள்ளிரவு அடித்து 2026ஆம் ஆண்டு பிறக்கும்போது மரினா பே வட்டாரத்தில் வாணவேடிக்கைகள் இரவைப் பகலாக்கவிருக்கின்றன.

செந்தோசா

செந்தோசாத் தீவில் புத்தாண்டை வரவேற்கும் கொண்டாட்டம் சிலோசோ கடற்கரையில் நடைபெறவிருக்கிறது. நேரடி இசை நிகழ்ச்சி மக்களை மகிழ்விக்கவருகிறது. மீடியகார்ப்பின் ‘லெட்ஸ் செலபிரேட் 2026’ நிகழ்ச்சியும் இடம்பெறும். வாணவேடிக்கைக்கும் பஞ்சமிருக்காது.

செந்தோசாவில் கண்ணைப் பறிக்கும் வாணவேடிக்கைகள் இடம்பெறும்.
செந்தோசாவில் கண்ணைப் பறிக்கும் வாணவேடிக்கைகள் இடம்பெறும். - படம்: செந்தோசா மேம்பாட்டுக் கூட்டுறவு

பலாவான் கிட்ஸ் சிட்டி ரூஃப்டாப் என்ற இடத்தில் குடும்பங்களுக்கு ஏற்ற நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பலாவான் கிரீன் பகுதியில் கேளிக்கை விழாவில் மக்கள் விளையாட்டுகளில் பங்கேற்கலாம்.

சென்சரிஸ்கேப் விழாக்கால அலங்காரங்களில் மின்னும். செந்தோசாவில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள், கடற்கரைப் பொழுதுபோக்கு மன்றங்கள் ஆகியவையும் தனித்தனியே அவற்றின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்தவிருக்கின்றன.

சிங்கப்பூர் விளையாட்டு நடுவம், காலாங்

கே-போப் பிரியர்களுக்குக் கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்து படைக்கவிருக்கிறது சிங்கப்பூர் விளையாட்டு நடுவம். கே-போப்பின் சூப்பர் ஜூனியர் குழு இசை மழையில் மக்களை நனைக்கவருகிறது.

சிங்கப்பூர் நீர் விளையாட்டு நிலையத்தில் பல நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நீர் விளையாட்டு நிலையத்தில் பல நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. - படம்: சிங்கப்பூர் விளையாட்டு நடுவம்
கேளிக்கை நிகழ்ச்சிகளை நீர் விளையாட்டு நிலையத்தில் கண்டு களிக்கலாம்.
கேளிக்கை நிகழ்ச்சிகளை நீர் விளையாட்டு நிலையத்தில் கண்டு களிக்கலாம். - படம்: சிங்கப்பூர் விளையாட்டு நடுவம்

பிரபல சீனப் பாடகர் செங் ஹுவான், உள்ளூர் இசைக் கலைஞர்கள் பெஞ்சமின் கெங், தபிதா நூசர், இமான் ஃபாண்டி ஆகியோரும் இசை விருந்து தரவிருக்கின்றனர்.

சிங்கப்பூர் விளையாட்டு நடுவத்தில் மேடைப் படைப்புகளையும் நேரடி நடவடிக்கைகளையும் எதிர்பார்க்கலாம்.

காலாங்கில் நடைபெறும் கொண்டாட்டத்தில் சிங்கப்பூரில் இதுவரை இல்லாத ஆக நீண்ட வாணவேடிக்கை மக்களைக் கவரக் காத்திருக்கிறது. நான்கு அத்தியாயங்களாக இடம்பெறும் கொண்டாட்டத்தில் 35 நிமிடங்களுக்கு வாணவேடிக்கையைச் சளிக்காமல் காணலாம்.

சிங்கப்பூர் விளையாட்டு நடுவத்தில் வாணவேடிக்கை நடைபெறும்.
சிங்கப்பூர் விளையாட்டு நடுவத்தில் வாணவேடிக்கை நடைபெறும். - படம்: சிங்கப்பூர் விளையாட்டு நடுவம்

கிளார்க் கீ

புத்தாண்டை வரவேற்க கிளார்க் கீ செல்லவிருப்போருக்கும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சிகியூ எட் கிளார்க் கீ ஆண்டிறுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம்.

உள்ளூர் இசைக்குழுக்களின் நிகழ்ச்சிகள், சிங்கப்பூர் ஆற்றின் மேல் ஆளில்லா வானூர்திக் காட்சிப் படைப்புகள், வெவ்வேறு பகுதிகளில் கலைப் படைப்புகள் போன்றவையும் இடம்பெறவிருக்கின்றன.

கிளார் கீயில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டவிருக்கிறது.
கிளார் கீயில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டவிருக்கிறது. - படம்: சிங்கப்பூர்ச் சுற்றுலாத் துறை

குடியிருப்புப் பேட்டைகளில் களைக்கட்டும் ஆண்டிறுதி கொண்டாட்டம்

ஏழு குடியிருப்புப் பேட்டைகள் 2026ஆம் ஆண்டைக் குதூகலத்துடன் வரவேற்கவிருக்கின்றன.

பூன் லே, கியட் ஹோங், மார்சிலிங், நீ சூன், பொங்கோல், தெம்பனீஸ், உட்லண்ட்ஸ் ஆகிய ஏழு பேட்டைகளில் சிறப்புக் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மெக்பர்சன் வட்டாரத்தில் இடம்பெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் திளைத்த குடியிருப்பாளர்கள்.
மெக்பர்சன் வட்டாரத்தில் இடம்பெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் திளைத்த குடியிருப்பாளர்கள். - படம்: மக்கள் கழகம்

கேளிக்கை விழாக்களில் தொடங்கி, மேடை நிகழ்ச்சிகள் வரை அனைத்திலும் கலந்துகொண்டு குடியிருப்பாளர்கள் மகிழலாம். உணவுக் கூடங்களுடன் வாணவேடிக்கை அல்லது ஆளில்லா வானூர்திப் படைப்புகளும் இடம்பெறவிருக்கின்றன.

வெளிநாட்டு ஊழியர்கள் பொழுதுபோக்கு நிலையங்கள், தங்கு விடுதிகள்

கிராஞ்சி, பெஞ்சுரு, சூன் லீ, தெருசன், துவாஸ் சவுத் ஆகிய ஐந்து வெளிநாட்டு ஊழியர் பொழுதுபோக்கு நிலையங்களில் ஆண்டிறுதிக் கொண்டாட்டங்கள் களைகட்டவுள்ளன.

சிங்கப்பூரில் உள்ள 10க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர் தங்கு விடுதிகளிலும் டிசம்பர் 31ஆம் தேதி ஆண்டிறுதிக் கொண்டாட்டம் இடம்பெறும்.

சூன் லீ நிலையத்தில் வாணவேடிக்கையை எதிர்பார்க்கலாம்.

சிங்கப்பூரில் உள்ள 10க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர் தங்கு விடுதிகளிள் புத்தாண்டு கொண்டாட்டம் இடம்பெறும்.
சிங்கப்பூரில் உள்ள 10க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர் தங்கு விடுதிகளிள் புத்தாண்டு கொண்டாட்டம் இடம்பெறும். - படம்: மனிதவள அமைச்சு
குறிப்புச் சொற்கள்