என்னதான் எல்லா நகரங்களும் தனிப்பட்ட சவால்களை எதிர்நோக்கினாலும் அந்தந்த ஊரில் உருவாக்கப்படும் தீர்வுகள் எல்லைதாண்டிய பலன்களைத் தரும்.
வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள், முடிவெடுப்பதில் சமூகங்களை ஈடுபடுத்துவது போன்றவை அத்தகைய தீர்வுகளில் அடங்கும்.
தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர், ஆஸ்திரியத் தலைநகர் வியென்னாவில் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை (ஜூலை 3, 4) நடந்த உலக நகர மேயர் மாநாட்டுக்குத் (World Cities Summit Mayors Forum) தலைமை தாங்கினார்.
50க்கும் மேற்பட்ட நகரங்களின் மேயர்கள் அந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். நகரங்கள் எதிர்கொள்ளும் நெருக்குதல்கள், கட்டுப்படியான விலையில் வீடமைப்பு, மாற்று எரிசக்தி மற்றும் நீர் நிர்வாகம் போன்றவை தொடர்பான சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வது பற்றிப் பேச அவர்கள் வியென்னா நகர மண்டபத்தில் ஒன்றுகூடினர்.
“பொதுவாக பிறரைத் தொடர்புகொண்டு ஒருவரிடமிருந்து மற்றொருவர் கற்றுக்கொள்ளும்போதுதான் ஆகப் புத்தாக்கத் தீர்வுகள் தலைதூக்கும்.
“நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்துகொண்டு அதேவேளை பிறரிடமிருந்து கற்றுக்கொள்ளத் தயாராய் இருந்து சிறந்த நடைமுறைகளை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்துகொள்ளும்போது வெற்றியடையும் சாத்தியம் அதிகமாகிறது,” என்று பேராளர்களிடம் ஆற்றிய தமது முடிவுரையில் திரு சீ குறிப்பிட்டார்.