தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் மூன்றாம் காலாண்டில் இரட்டிப்பானது

2 mins read
5e6f8cbf-6129-4ab5-94bc-01e0f3dc0550
முந்தைய காலாண்டில் ஏறக்குறைய 43.7 விழுக்காட்டு நிறுவனங்கள் வேலைக்கு ஆள் சேர்த்தன. மூன்றாம் காலாண்டில் அந்த எண்ணிக்கை 44.1 விழுக்காடானது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் பணியமர்த்தப்பட்டோர் எண்ணிக்கை இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்புகள் ஒருபுறம் அதிகரித்ததாலும் ஆட்குறைப்பு விகிதத்தில் மாற்றம் இல்லாததாலும் அந்த நிலை ஏற்பட்டது.

இவ்வாண்டு ஜூலையிலிருந்து செப்டம்பர் வரை ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு எண்ணிக்கை 24,800ஆக வளர்ச்சி கண்டது. இரண்டாம் காலாண்டைவிட அது இரட்டிப்பு அதிகம். ஏப்ரல் மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரை சிங்கப்பூரில் 10,400 வேலைவாய்ப்புகள் இருந்ததாக ஊழியரணியின் தொடக்கக் கட்ட தரவு சுட்டியது.

வேலைவாய்ப்பு வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட வலுவடைந்ததாக மனிதவள அமைச்சு குறிப்பிட்டது.

“வேலைவாய்ப்பு வளர்ச்சி பல்வேறு துறைகளில் தொடர்ந்து நிலையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுகாதாரம், சமூகச் சேவைகள், நிதிச் சேவைகள் ஆகியவற்றில் உள்ளூர்வாசிகள் அதிகம் பணியமர்த்தப்பட்டனர்,” என்று அமைச்சு சொன்னது.

எனினும் அனைத்துலகப் பொருளியல் சூழலின் தாக்கம் தொடர்வதால் தகவல், தொடர்பு, நிபுணத்துவச் சேவைகள் ஆகியவற்றில் உள்ளூர்வாசிகள் பணியமர்த்தப்படுவதில் பெரிய அளவில் வளர்ச்சிக் காணப்படவில்லை.

மூன்றாம் காலாண்டில் ஆட்குறைப்பு செய்யப்பட்டோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3,500. அனைத்துத் துறைகளில் அந்த எண்ணிக்கை சரிந்தது அல்லது எண்ணிக்கையில் மாற்றம் எதுவும் இல்லை என்று அமைச்சு கூறியது.

செப்டம்பர் மாதத்தில் வேலையின்மை விகிதம் அனைத்துத் துறைகளில் குறைவாகவே இருந்தது. சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் ஆகியோரிடையே வேலையின்மை விகிதம் 2.8 விழுக்காடாக இருந்தது.

சிங்கப்பூரர்களிடையே மட்டும் அந்த எண்ணிக்கை 3 விழுக்காடாக இருந்தது.

ஆள்களை வேலைக்குச் சேர்க்கும் நிறுவனங்களின் விகிதமும் மூன்றாம் காலாண்டில் உயர்ந்ததாக மனிதவள அமைச்சு சுட்டியது.

முந்தைய காலாண்டில் ஏறக்குறைய 43.7 விழுக்காட்டு நிறுவனங்கள் வேலைக்கு ஆள் சேர்த்தன. மூன்றாம் காலாண்டில் அந்த எண்ணிக்கை 44.1 விழுக்காடானது.

வெளிநாட்டினரைப் பொறுத்தவரை, கட்டுமானம், உற்பத்தி ஆகிய துறைகளில் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருந்தோர் அதிகம் பணியமர்த்தப்பட்டனர்.

சம்பளத்தைக் கூட்ட திட்டமிடும் நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவைக் கண்டது.

மனிதவள அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரம் மூலம் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு விகிதத்தில் மாற்றம் எதுவும் இருக்காது என்று கருதப்படுகிறது.

இருப்பினும், செலவினங்கள் அதிகம் இருப்பதால் சம்பள வளர்ச்சி மந்தமாக இருக்கும்.

சிங்கப்பூரர்கள் பணியமர்த்தப்படும் போக்கும் சற்று மெதுவடையக்கூடும் என்றும் கணிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்