மெத்தம்ஃபெட்டமின் வேதிப்பெருளைக் கொண்டுள்ள மின்சிகரெட்டுப் பொதியுறை ஒன்றை வைத்துள்ளதன் தொடர்பில் ஆடவர் ஒருவர் செப்டம்பர் 15ல் குற்றம் சாட்டப்பட்டார்.
லிம் ஹெங் ஷெங், 47, செயற்கை ‘கன்னாபினாய்டு’ (cannabinoid) கலந்த மின்சிகரெட்டை வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
தற்போது லிம்மீது மொத்தம் எட்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை போதைப்பொருள் தொடர்பானவை.
கடந்த ஜனவரி 16ஆம் தேதி அல்லது அதற்கு முன், லிம் மெத்தம்ஃபெட்டமினை உட்கொண்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அன்றைய தினம் காலை 10.20 மணிக்கு முன்னதாக ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 65ல் உள்ள கார் நிறுத்துமிடத்தில் மின்சிகரெட்டு தொடர்பான குற்றங்களை லிம் புரிந்ததாகக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், அவர் குறைந்தது 23.41g மெத்தம்ஃபெட்டமினை கொண்ட 12 பொட்டலங்களைக் கடத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், அன்றைய தினம் அவர் சுமார் 8 கிராம் கெட்டமின், குறைந்தது 1.21 கிராம் கஞ்சா ஆகியவற்றுடன் போதைப்பொருள் கருவிகளை வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
செப்டம்பர் 17ல் அவரது வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
மெத்தம்ஃபெட்டமினைக் கடத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால், லிம்மிற்கு ஐந்து முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ஐந்து முதல் 15 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
போதைப்பொருள் கலந்த மின்சிகரெட்டுப் பொதியுறை (vape cartridge) வைத்திருந்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனையும், $20,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
மின்சிகரெட்டு தொடர்பான குற்றங்கள் பற்றிப் புகாரளிக்க, சுகாதார அறிவியல் ஆணையத்தின் (Health Sciences Authority) 6684-2036 அல்லது 6684-2037 என்ற அவசர எண்ணில் தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை அழைக்கலாம். பொது விடுமுறை நாட்களிலும் இந்தச் சேவை உண்டு. www.go.gov.sg/reportvape என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம்.

