வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் போதைப்பொருள்; நால்வர் கைது

2 mins read
2e6eca4f-c027-43a6-97da-b130c92cd872
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அக்டோபர் 22 அன்று நடத்திய சோதனையில் கைதான சந்தேகப் பேர்வழி. - படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு

உட்லண்ட்ஸ் அவென்யூ 1ல் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவிடுதியில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (CNB) கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நடத்திய சோதனையில் பலவித போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சந்தேகத்தின்பேரில் 24 வயதுக்கும் 36 வயதுக்கும் உட்பட்ட நான்கு வெளிநாட்டு ஊழியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அக்டோபர் 22 அன்று நடந்த அந்த சோதனை பற்றிய விவரங்களை அக்டோபர் 25 (சனிக்கிழமை) ஒரு செய்தி அறிக்கையில் வெளியிட்டது.

சோதனை நடவடிக்கையில் 32 வயது ஆடவர் போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் புழங்கிய குற்றத்துக்கு 24, 30 மற்றும் 36 வயதுடைய மற்ற மூவரும் கைதாகியுள்ளனர்.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கியிருந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 68கிராம் கெனபிஸ், 18கிராம் ஐஸ், 29 ‘யாபா’ மாத்திரைகள் ஆகியவற்றோடு போதைப்பொருள் பயன்பாட்டுத் துணைக்கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

“போதைபொருள்களின் பயன்பாட்டால் ஏற்படும் பாதகங்களைப் பற்றியும் அவற்றுக்கு எதிராக அரசாங்கத்தின் கடுமையான நடவடிக்கைகள் சார்ந்தும் விழிப்புணர்வை மேம்படுத்த வெளிநாட்டு ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்துடனும் போதைப்போருள் ஒழிப்புப் பிரிவு ஒருங்கிணைந்து தொடர்ந்து செயலாற்றி வருகிறது” என்று அதன் அமலாக்கப் பிரிவின் தலைவர் ராய்ஸ் சுவா தெளிவுபடுத்தினார்.

போதைப்பொருள் கடத்துவோர், புழங்குவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்காது. சிங்கப்பூரை பாதுகாப்பாக வைக்க போதைப்பொருள்களைக் கண்டறியவும் அவற்றின் பயன்பாட்டைத் தடுத்து ஒழிக்கவும் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு செயலாற்றும் எனவும் அவர் உறுதியளித்தார்.

சந்தேக நபர்கள் மீதான விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்