தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போதைப்பொருள் குற்ற முறியடிப்பு: மலேசியாவில் சிங்கப்பூரர்கள் மூவர் கைது

2 mins read
d42730f8-14ba-4fcb-9906-02ada030f965
அம்பாங் ஜெயா பகுதியில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். - படம்: Jabatan Siasatan Jenayah Narkotik PDRM / ஃபேஸ்புக்

மலேசியக் காவல்துறை மேற்கொண்ட போதைப்பொருள் குற்ற முறியடிப்பு நடவடிக்கையில் கைதான நான்கு ஆடவர்களில் மூவர் சிங்கப்பூரர்கள்.

சிலாங்கூர் மாநிலத்தில் போதைப்பொருள் குற்றக் கும்பல் எனச் சந்தேகிக்கப்படும் அக்கும்பல் பிடிபட்டது. அந்தக் கும்பல் கொக்கைன் கலந்த மின்சிகரெட் திரவத்தை விநியோகித்ததாகக் கூறப்படுகிறது.

இம்மாதம் 19ஆம் தேதியன்று அம்பாங் ஜெயா பகுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக மலேசிய தேசியக் காவல்துறையின் போதைப்பொருள் குற்றவியல் விசாரணைப் பிரிவு (என்சிஐடி) திங்கட்கிழமை (ஜூன் 23) ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.

ஹோட்டல் ஒன்றுக்கு அருகே காரில் இருந்த ஓர் 57 வயது மலேசியரும் 46, 25 வயதாகும் சிங்கப்பூரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக மலேசியாவின் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் தெரிவித்தது. ஹோட்டல் வருகையாளர் தளத்தில் (lobby) 31 வயது சிங்கப்பூரர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

சம்பந்தப்பட்ட டொயோட்டா வெல்ஃபையர் வகை காரில் மின்சிகரெட் திரவம் கொண்ட 4,958 கட்டுகள் உள்ள 10 பெட்டிகளைக் கண்டதாக என்சிஐடி தெரிவித்தது. அக்கட்டுகளில் 9.42 லிட்டர் அளவிலான கொக்கைன் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுவதாகவும் அதன் மதிப்பு 7.29 மில்லியன் ரிங்கிட் (2.2 மில்லியன் வெள்ளி) வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் என்சிஐடி குறிப்பிட்டது.

சம்பந்தப்பட்டக் குற்றக் கும்பலைச் சேர்ந்தோர் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் சொகுசு கொண்டோமினிய வீடுகளை வாடகைக்கு எடுத்து அவற்றில் போதைப்பொருள்களைப் பொட்டலமிட்டு மற்ற நாடுகளுக்கு விநியோகித்ததாக என்சிஐடியின் தற்காலிக இயக்குநர் மட் ஸானி முகம்மது சலாஹுதீன் செ அலி திங்கட்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

சந்தேக நபர்களில் மூவருக்கு நாளுக்கு 100லிருந்து 200 வெள்ளி வழங்கப்பட்டதாகவும் மின்சிகரெட் விற்பனையில் கிடைக்கும் லாபத்தை மற்றொரு சந்தேக நபர் பெற்றதாகவும் திரு மட் ஸானி சொன்னார்.

குறிப்புச் சொற்கள்