தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போதைப் பொருள் ஒழிப்புச் சோதனை: 82 பேர் கைது

2 mins read
a2d838c6-849c-420d-92fc-8a5e1a8d7caf
தீவெங்கும் நடத்தப்பட்ட சோதனையில் $132,000க்கும் அதிகமான மதிப்புள்ள போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. - கோப்புப் படம்

சிங்கப்பூர் முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் $132,000க்கும் அதிகமான மதிப்புள்ள போதைப் பொருள்களை வைத்திருந்ததன் தொடர்பில் 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அங் மோ கியோ, புக்கிட் மேரா, சாங்கி, பொங்கோல், உட்லண்ட்ஸ் ஆகிய வட்டாரங்களில் இம்மாதம் 16ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை சோதனைகள் நடத்தப்பட்டதாக மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு (ஜூன் 21) தெரிவித்தது.

ஒட்டுமொத்தமாக 1,307 கிராம் கஞ்சா, 739 கிராம் ஹெராயின், 196 கிராம் ஐஸ், 52 கஞ்சா விதைகள், இரண்டு எக்ஸ்டஸி மாத்திரைகள், 2 கிராம் கஞ்சா பிசின் ஆகியவை அகப்பட்டன.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்கள் 640 போதைப் புழங்கிகள் ஒரு வாரத்துக்குப் பயன்படுத்தும் அளவு என்று அதிகாரிகள் கூறினர்.

பொங்கோல் சென்டிரலில் உள்ள வீட்டில் உதவி கேட்டு இம்மாதம் 14ஆம் தேதி காவல்துறை அதிகாரிகளுக்கு அழைப்பு வந்தது.

அதையடுத்து வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் 35 வயது சிங்கப்பூர் ஆடவரைக் கைது செய்தனர்.

கட்டுப்படுத்தப்பட்ட போதைப் பொருள்கள் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டன.

மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு பின் விசாரணையை மேற்கொண்டது.

ஜூன் 16ஆம் தேதி மற்றொரு சம்பவத்தில் விசாரணையைத் தொடர்ந்து ஈ‌‌சூன் அவென்யூ 6இல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அதில் 34 வயது சிங்கப்பூர் ஆடவர் கைது செய்யப்பட்டார். ஆடவரின் வீட்டில் 29 கிராம் கஞ்சாவும் போதைப் பொருள்களும் கண்டெடுக்கப்பட்டன.

பெண்டமியரில் உள்ள மூன்ஸ்டோன் லேனில் இரண்டு வெளிநாட்டு ஆடவர்களும் கைதாகினர்.

அவர்களில் ஒருவர் போதைப் பொருளைக் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 31 வயது ஆடவர். மற்றவர் போதைப் பொருள் உட்கொண்டதாக நம்பப்படும் 37 வயது ஆடவர்.

31 வயது ஆடவரின் மின்சைக்கிள் உள்ளிட்ட இடங்களில் 1,059 கிராம் கஞ்சாவும் 19 கிராம் ஐஸும் காணப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணை தொடர்கிறது.

பிப்ரவரி 12ஆம் தேதி மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு வெளியிட்ட அறிக்கையின்படி கடந்த ஆண்டு கைதான புதிய போதைப் புழங்கிகளில் 126 பேர் 20 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள். அதாவது, பதின்ம வயதினர்.

போதைப் புழக்கத்திற்கு அறிமுகமானோர் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டு 952ஆக இருந்தது.

கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 966க்கு அதிகரித்தது.

குறிப்புச் சொற்கள்