பண்டிகைக்காலம் நெருங்கிவரும் வேளையில், இணைய மோசடிகள் அதிகரிக்கக்கூடும் என்பதால் மக்கள் இன்னும் விழிப்புணர்வுடன் இருக்கும்படி தேசிய குற்றத் தடுப்பு மன்ற (என்சிபிசி) தலைவர் ஜெரல்ட் சிங்கம் நினைவூட்டியுள்ளார்.
‘நமது தெம்பனிஸ்’ நடுவத்தில் இந்த வார இறுதியில் (நவம்பர் 22, 23) நடைபெற்றுவரும் என்சிபிசி ஆண்டிறுதிக் கண்காட்சியில் அவர் அவ்வாறு கூறினார்.
“நீங்கள் ஒரு பொருளை இணையத்தில் வாங்கும்போது முதலில் விற்பனையாளர் யார் என்பதைக் காணவும். அவர்கள் நம்பகமானவர்களா என்பதை இணையத்தில் உறுதிசெய்யவும்.
“சில சமயம், விற்பனையாளர்கள் தங்களைப் பற்றி வாடிக்கையாளர்கள் மேலும் அறிந்துகொள்ள இணைய முகவரியைக் கொடுக்கலாம். ஆனால், அந்த முகவரியில் பொய்யான தகவல்கள் இருக்கலாம். அல்லது, மோசடியினுள் உங்களைக் கொண்டுசெல்லும் தளமாக அது இருக்கலாம்.
“விளம்பரங்களையோ சலுகை விற்பனைகளையோ உடனடியாக நம்பிவிடாதீர்கள். விற்பனை விலை நம்பமுடியாத அளவுக்கு மலிவாக இருந்தால், அதை நம்பக்கூடாது. இயன்றால், பொருள்கள் உங்களை வந்தடையும் முன்பே கட்டணத்தைச் செலுத்தாதீர்கள்,” என அறிவுறுத்தினார் திரு சிங்கம்.
உணவகத்தில் உணவு வாங்கும்போது உடைமைகளை விட்டுச் செல்லாதிருத்தல், முதலீட்டு மோசடித் தடுப்பு போன்ற உத்திகளும் பகிரப்பட்டன.
‘டெல்டா சவால்: மோசடிகளுக்கு எதிராக ஓவியம்’ போட்டியின் வெற்றியாளர்களும் அறிவிக்கப்பட்டனர். இப்போட்டியில் 17 முதல் 35 வயது வரையிலான இளையர்கள், ‘ஸ்கேம்ஷீல்டு’ உதவி எண்ணான 1799ஐ மையப்படுத்தும் சுவரோவியங்களை வரைந்தனர். அவர்களின் ஓவியங்கள் தீவு முழுவதும் பல சுவர்களிலும் உள்ளன.
உள்துறை; சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணையமைச்சர் கோ பெய் மிங் அவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். முதல் பரிசுக்கு $10,000 ரொக்கம் கிடைத்தது.
தொடர்புடைய செய்திகள்
“இளையர்கள் அர்த்தமுள்ள சுவரோவியங்களை உருவாக்கி, மோசடிகளின் அபாயம் பற்றி விழிப்புணர்வூட்டியுள்ளனர்,” என்றார் திரு கோ.
தொழில்நுட்பக் கல்விக் கழக (மத்தியக் கல்லூரி) இயங்குபட மாணவர்கள் வேல்முருகன் சமர்ஜித், நூர் அதீனா, போ ஜியா அன் ஏபி, மீன் தொட்டியில் உள்ள மீன்களைப் பெண் ஒருவர் பார்க்கும் சுவரோவியத்தை வரைந்தனர். அவர்கள் ‘மெரிட்’ விருது பெற்றனர்.
“அந்த மீன்கள் மோசடிகளைக் குறிக்கின்றன. அப்பெண் காண்பது மாயையே,” என்றார் சமர்ஜித்.
‘ஸ்கேம்ஷீல்டு’ செயலியைப் பதிவிறக்கும்படி கண்காட்சியில் மக்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.
“மோசடி எண்ணிலிருந்து எனக்கு அழைப்பு வந்தால், நான் அதைப் பற்றி ஸ்கேம்ஷீல்டு செயலியில் புகாரளித்தால் தீவு முழுவதும் பிறருக்கும் அந்த எண்ணிலிருந்து அழைப்புகள் வருவது தடுக்கப்படும்,” என்றார் என்சிபிசி தூதர் ஜார்ஜ் மேத்யூஸ்.
என்சிபிசி கெளரவக் குற்றத்தடுப்புத் தூதரான உள்ளூர் திரைப்பட இயக்குநர் ஜேக் நியோ, குற்றத்தடுப்பு பற்றித் தயாரித்த இசைக் காணொளியும் நிகழ்ச்சியில் வெளியானது.
அடுத்த ஆண்டுடன், சிங்கப்பூரின் ‘கிரைம்வாட்ச்’ குற்றக் கண்காணிப்புத் தொடர் தன் 40வது ஆண்டு நிறைவையும் கொண்டாடும்.
மோசடிகள் தொடர்பாக உதவிபெற, 1799 எண்ணில் எந்நேரமும் தொடர்புகொள்ளலாம். மேலும் தெரிந்துகொள்ள https://www.scamshield.gov.sg/ இணையத்தளத்தை நாடலாம்.

