ஸ்பெய்னில் கொல்லப்பட்ட சிங்கப்பூர்ப் பெண் ஒருவரின் சடலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மரபணு அடையாளம் வழியாக அந்தப் பெண்ணை, வழக்கின் ஒரே சந்தேக நபரான சிங்கப்பூர் ஆடவருடன் ஸ்பானிய புலனாய்வு அதிகாரிகள் தொடர்புபடுத்தியுள்ளனர்.
முன்னதாக, ஆடவர்கள் இருவரை அடையாளப்படுத்தும் மரபணுக் கூறுகள் திருவாட்டி ஆட்ரே ஃபாங்கின் உடலில் கண்டுபிடிக்கப்பட்டன.
அவற்றில் ஒன்று, சந்தேக நபர் மிட்ச்சல் ஓங்கின் தந்தைவழி வம்சத்துடன் பொருந்துவதாக ஸ்பெயினின் தேசிய நச்சுத்தன்மை, பிரேதப் பரிசோதனை ஆய்வு நிலையம் கண்டுபிடித்துள்ளது.
இரண்டாவது அடையாளத்திற்கும் ஓங்கின் மரபணுவுக்கும் தொடர்பில்லை.
ஆயினும், இந்த முறையை வைத்து குற்றவாளியை உறுதியாக முடிவு செய்ய இயலாது என்று ஓங்கின் வழக்கறிஞர் மரியா ஜீசஸ் கஸ்டானெடா தெரிவித்தார்.
கண்டுபிடிக்கப்பட்ட மரபணு அடையாளம், 43 வயது திரு ஓங்கின் தந்தைவழி வம்சத்தில் உள்ள எல்லார்க்கும் பொருந்துவதால் விசாரணையை விரிவுபடுத்தி மற்ற சந்தேக நபர்களையும் உள்ளடக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
“மிட்சல் ஓங், தாம் நிரபராதி எனத் தொடர்ந்து கூறுகிறார். ஸ்பானிய நீதிக் கட்டமைப்பின் பணிகளைத் தொடர்ந்து நம்புகிறார். உண்மையைத் தெளிவுபடுத்துவதற்கான எல்லா முயற்சிகளுக்கும் தொடர்ந்து ஒத்துழைப்பார்,” என்று அவர் கூறினார்.
2024 ஏப்ரலில் அபனிலா நகரில் திருவாட்டி ஃபாங்கின் சடலம், பல்வேறு கத்திக்குத்துக் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஓங், அதே மாதத்தில் கைது செய்யப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
கட்டடக்கலைஞராகப் பணியாற்றிய திருவாட்டி ஃபாங், ஸ்பெயினின் வெலென்சியா பகுதியிலுள்ள ஸாபியா பகுதிக்குத் தனியே சென்றிருந்தார்.
எட்டு நாள்களுக்குள் திரும்ப வேண்டியிருந்த திருவாட்டி ஃபாங்கை ஏப்ரல் 10ஆம் தேதிக்குப் பிறகு யாரும் தொடர்புகொள்ள முடியவில்லை.
அந்த 39 வயது மாது, கத்திக்குத்துக் காயங்களாலும் தலையில் ஏற்பட்ட படுகாயங்களாலும் உயிர் இழந்தார். அவரது ஆடையில் இரு ஆடவர்களின் மரபணு அடையாளங்கள் காணப்பட்டதாக ஸ்பானிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
முன்னதாக, காப்புறுதி முகவராகவும் நிதியியல் நிபுணராகவும் இருந்த ஓங், திருவாட்டி ஃபாங்கின் மத்திய சேமநிதிச் சேமிப்புக் கணக்கின் ஒரே பெறுநராக நியமிக்கப்பட்டதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கணக்கில் கிட்டத்தட்ட 498,000 வெள்ளி பணம் இருந்தது காணப்பட்டது.