நிலப் போக்குவரத்து ஆணையம் ரயில் வண்டியின் அச்சாணிகளில் ஏற்படும் வெப்பத்தைக் கண்டறியும் சாதனங்களுக்கான செயல்முறைத் திட்டத்தை அனைத்து எம்ஆர்டி ரயில்களிலும் பொருத்தவிருக்கிறது.
வரவிருக்கும் ஜூரோங் வட்டார வழித்தடத்திலும் அவை அமைக்கப்படும். கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி, கிழக்கு - மேற்கு ரயில் தடத்தில் ஆறு நாள்களுக்கு ஏற்பட்ட சேவைத் தடைக்கு ‘ஆக்ஸல் ராட்’ (axle rod) எனப்படும் ரயில் வண்டிச் சக்கரங்களை இணைக்கும் அச்சாணிகள் முக்கியக் காரணமாகக் கண்டறியப்பட்டன.
கடந்த அப்டோபர் மாதம் 31ஆம் தேதி அவற்றின் அதிகாரபூர்வ கொள்முதலுக்கான குத்தகை மற்றும் ஒப்பந்த விண்ணப்பங்கள் ஜிபிஸ் (GeBiz) எனப்படும் அரசாங்க இணையத்தளத்தில் வெளியிடப்பட்டன.
அந்த விண்ணப்பங்கள் 2026ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி பிற்பகல் 4 மணி வரையில் பெறப்படும். குறுக்குத் தீவு ரயில் பாதை இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை. ஏனெனில், அதன் கட்டுமானம் இன்னும் நடந்துவருகிறது. அது 2030ஆம் ஆண்டுக்குப் பிறகே முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூரோங் வட்டார ரயில் வழித்தடங்கள் வருகின்ற 2027ஆம் ஆண்டு முதல் 2029ஆம் ஆண்டுக்குள் கட்டங்கட்டமாகத் திறக்கப்படவுள்ளன.
ரயில் அச்சாணிகளில் வெப்பத்தைக் கணிக்கும் உணர்கருவிகள் கொண்ட சாதனங்களைப் பொருத்தும் செயல்முறைகளை மேற்கொள்வதன்வழி நிகழ்நேரத்தில் சேவைத் தடைகளைத் தவிர்க்கலாம் என்று நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்.

