மூப்படைவோரிடம் மறதி நோய், சமுதாயம் முன்னிருக்கும் சவால்: சண்முகம்

2 mins read
6eac4a87-61d7-4169-b517-970004eb2f5f
டிமென்ஷியா சிங்கப்பூர் எனப்படும் மறதி நோய் அமைப்பின் 35வது ஆண்டு விருந்துபசரிப்பில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5ஆம் தேதி) கலந்துகொண்டு பேசிய உள்துறை அமைச்சர் கா சண்முகம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் மூப்படையும் மக்கள் நாட்டின் வெற்றிப் பயணம், கடைப்பிடிக்கும் நல்ல கொள்கைகளை பிரதிபலிக்கின்றன.

எனினும், இதனால் 2030ஆம் ஆண்டில் மக்கள்தொகையில் கால்வாசியினர் 65 வயதடைந்திருப்பதுடன் 152,000க்கும் மேற்பட்டோர் முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்ந்து வருவர் என்று கூறினார் உள்துறை அமைச்சர் கா சண்முகம்.

இந்த நோய் ஒரு மருத்துவப் பிரச்சினை மட்டுமல்ல. இது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவையும் பாதிப்பதுடன் நம் முன்னிருக்கும் ஒரு சவாலும்கூட என்று அவர் தெரிவித்தார்.

டிமென்ஷியா சிங்கப்பூர் எனப்படும் முதுமைக்கால மறதி நோய் அமைப்பின் 35வது ஆண்டு விருந்துபசரிப்பில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5ஆம் தேதி) கலந்துகொண்டு உரையாற்றிய திரு சண்முகம், இது சமுதாயத்தை எதிர்நோக்கியுள்ள சவால் என்பதை அரசு நன்கு உணர்ந்துள்ளதாக விளக்கினார். அத்துடன், இதை எதிர்கொள்ள அரசாங்கம் சம்பந்தப்பட்ட அனைவருடனும் இணைந்து பணியாற்றி வருவதாக தெளிவுபடுத்தினார்.

இதில் கெப்பல் நிறுவனம் தனது கெப்பல் அறநிறுவனம் மூலம் முதுமைக்கால மறதி நோய் அமைப்பு, அதன் சேவையை ஆதரிப்பதற்காக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு $1 மில்லியன் வழங்க உறுதி கூறியுள்ளது.

முதுமைக்கால மறதி நோய் ஏற்படாமல் தடுப்பது, சீக்கிரமே அடையாளம் காண்பது பின்னர் அதைச் சமாளிக்க ஒட்டுமொத்த நிலையில் ஆதரவு வழங்குவது என்பதில் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் சண்முகம் கூறினார்.

மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி, ஏஜ்வெல் எஸ்ஜி போன்ற திட்டங்கள் முதுமைக்கால மறதி நோயை ஏற்படுத்தக்கூடிய உடல் செயல்பாடு இல்லாமை, உடற்பருமன், சமூகத்திடமிருந்து விலகியிருப்பது போன்றவற்றை எதிர்த்துப் போராடுவதற்காக உருவாக்கப்பட்டவை. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதன் மூலம் வருங்கால தலைமுறையினரிடையே முதுமைக்கால மறதி நோய் ஏற்படுவதைக் குறைக்கவல்லது என்று அமைச்சர் சண்முகம் சொன்னார்.

இதற்குத் தேவைப்படும் நீண்டகால பராமரிப்பு சேவை வழங்க தேவைப்படும் நிதியுதவி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த நிதியுதவித் திட்டங்களில் சில பிரதமர் சமர்ப்பித்த வரவுசெலவுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளதையும் திரு சண்முகம் சுட்டினார்.

அதிகரிக்கப்பட்ட நிதியுதவிக்கு உதாரணமாக பராமரிப்பு சேவை வழங்குவோருக்கு ‘த ஹோம் கேர்கிவிங் கிராண்ட்’ என்ற திட்டத்தின் மூலம் பராமரிக்கத் தேவைப்படும் செலவினத்தை ஈடுகட்ட கூடுதல் ஆதரவு வழங்கப்படுவதாக அமைச்சர் சண்முகம் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்