தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாட்டு ஊழியர்களை மகிழ்வித்த தீபாவளிக் கொண்டாட்டம்

2 mins read
ae0e21e2-24f9-4133-a7a6-7957c6ddae33
செம்பாவாங் பொழுதுபோக்கு மன்றத்தில் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டத்தில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் கலந்துகொண்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உற்றார் உறவினர்களைப் பிரிந்து சிங்கப்பூரில் வேலை செய்யும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் செம்பாவாங் பொழுதுபோக்கு மன்றத்தில் தீபாவளியை திங்கட்கிழமை (அக்டோபர் 20) உற்சாகமாகக் கொண்டாடிக் களித்தனர்.

‘ஏஜிடபுள்யுஓ’ (AGWO) எனும் வெளிநாட்டு ஊழியர் உதவி அமைப்பு, மனிதவள அமைச்சின் ஆதரவுடன் ஆறாவது முறையாகப் பெரிய அளவில் ஒருநாள் தீபாவளிக் கொண்டாட்டத்தை வெளிநாட்டு ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்தது.

‘சிங்கப்பூரை ஒன்றாக இணைந்து உருவாக்குவோம்: தீபாவளி: ஒளி, வலிமையின் விழா’ என்ற கருப்பொருளில் காலை 9 மணிமுதல் இரவு 9 மணிவரை நீடித்த கொண்டாட்டத்தில் ஊழியர்களை மகிழ்விக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வெளிநாட்டு ஊழியர்களை மகிழ்விக்க ஆடல் பாடல் அங்கங்கள் இடம்பெற்றன.
வெளிநாட்டு ஊழியர்களை மகிழ்விக்க ஆடல் பாடல் அங்கங்கள் இடம்பெற்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வெவ்வேறு நாட்டிலிருந்து வந்துள்ள ஊழியர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தும் சிறப்பு அங்கமும் கொண்டாட்டத்தில் இம்முறை முக்கிய இடம்பிடித்தது.

தீபாவளி குறித்த புரிந்துணர்தலை ஏற்படுத்தும் வகையில் பண்பாடுகளுக்கிடையிலான கலந்துரையாடல் முதன்முறையாக நடத்தப்பட்டது.

கலாசாரங்களுக்கு இடையிலான கலந்துரையாடலில் வெளிநாட்டு ஊழியர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
கலாசாரங்களுக்கு இடையிலான கலந்துரையாடலில் வெளிநாட்டு ஊழியர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அதில் இந்தியா, பங்ளாதே‌ஷ், மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.

“இத்தகைய கலந்துரையாடல் மூலம் ஒரே கூரையின்கீழ் வாழும் வெளிநாட்டு ஊழியர்களிடையே புரிந்துணர்வையும் நட்பையும் வலுப்படுத்த முனைகிறோம்,” என்றார் ‘ஏஜிடபுள்யுஓ’ அமைப்பின் தலைமை இயக்குநர் ரெவ்ரண்ட் சாமுவேல் கிஃப்ட் ஸ்டீஃபன்.

தீபாவளியைக் கொண்டாடும் முறை குறித்தும் அதுசார்ந்த பழக்கவழக்கங்கள் குறித்தும் வெளிநாட்டு ஊழியர்கள் பகிர்ந்துகொண்டனர்.

“வெவ்வேறு பின்னணியிலிருந்து வந்தவர்கள் தீபாவளியைப் பல காரணங்களுக்காகக் கொண்டாடுகின்றனர் என்பதைப் பற்றி அறிந்துகொண்டது வியப்பாக இருந்தது,” என்றார் இந்தியாவைச் சேர்ந்த திரு சுகுமார், 42.

உணவு, அன்பளிப்புகள், தின்பண்டங்கள் ஆகியவையும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டன.

கொண்டாட்டத்திற்கு மேலும் ஊக்கமூட்டியது வெளிநாட்டு ஊழியர்களுக்காக நடத்தப்பட்ட கபடிப் போட்டி.

கபடிப் போட்டியில் மொத்தம் 16 குழுக்கள் பங்கேற்றன.
கபடிப் போட்டியில் மொத்தம் 16 குழுக்கள் பங்கேற்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
கபடி விளையாட்டாளர்கள் வெற்றிக்கிண்ணத்தைப் பெற விட்டுக்கொடுக்காமல் விளையாடினர்.
கபடி விளையாட்டாளர்கள் வெற்றிக்கிண்ணத்தைப் பெற விட்டுக்கொடுக்காமல் விளையாடினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“இரண்டாவது ஆண்டாக தீபாவளிக்கென இந்தக் கபடிப் போட்டியை நடத்துகிறோம். இந்த முறை 16 அணிகள் பங்கேற்றன. காலை 9 மணியிலிருந்து போட்டிகள் சூடுபிடித்தன. இறுதிச்சுற்றுக்கு நான்கு அணிகள் தகுதிபெற்றன,” என்றார் வெளிநாட்டு ஊழியர்களுக்கான சிங்கப்பூர் கபடிக் கூட்டணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார்.

இறுதிச்சுற்றில் கட்டக்குடி அணி வெற்றிக் கிண்ணத்தைத் தட்டிச் சென்றது. வெற்றிக்கிண்ணத்துடன் ரொக்கமும் பதக்கங்களும் பரிசாக வழங்கப்பட்டன.

கபடிப் போட்டியின் இறுதிச்சுற்றில் கட்டக்குடி அணி வெற்றிபெற்றது.
கபடிப் போட்டியின் இறுதிச்சுற்றில் கட்டக்குடி அணி வெற்றிபெற்றது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“இந்தியாவில் தீபாவளியைக் கொண்டாட முடியாத எங்களைப் போன்ற ஊழியர்களுக்கு இங்குள்ள சக ஊழியர்கள்தான் குடும்பம். இந்தியாவில் விளையாடியதுபோல சிங்கப்பூரிலும் கபடி விளையாடுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது தீபாவளியை மனநிறைவுடன் கொண்டாட வழியமைத்தது,” என்றார் வெளிநாட்டு ஊழியர் விஜயபாலு.

முதன்முறையாக கபடிப் போட்டியில் பங்கேற்ற திரு ராமன், “ஒவ்வோர் ஆண்டும் தீபாவளியை லிட்டில் இந்தியா போன்ற இடங்களுக்குச் சென்று நண்பர்களுடன் கொண்டாடுவேன். இம்முறை நானும் என் நண்பர்களும் போட்டியில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்றார்.

கொண்டாட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் வெளிநாட்டு ஊழியர்களை மகிழ்வித்தன.

குறிப்புச் சொற்கள்