தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாரம்பரிய பழக்கங்களுடன் தொடங்கிய தீபாவளி

2 mins read
34f5a8ca-4f1c-45f6-bd15-53bb2e3f2dd3
தீபாவளிக் கொண்டாட்டத்தைப் பலரும் இறை வழிபாட்டுடன் தொடங்கினர். - படம்: செய்யது இப்ராஹிம்

தீபாவளிக் கொண்டாட்டம் வழக்கம்போல இன்று பலருக்கும் ஆலய வழிபாட்டுடன் தொடங்கியது.

காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு புத்தாடை அணிந்து தீவெங்கும் உள்ள பல ஆலயங்களில் மக்கள் திரண்டு வழிபாடு செய்தனர்.

பலரும் குடும்பமாகத் தீவெங்கும் உள்ள ஆலயங்களுக்குச் சென்றனர்.
பலரும் குடும்பமாகத் தீவெங்கும் உள்ள ஆலயங்களுக்குச் சென்றனர். - படம்: செய்யது இப்ராஹிம்

சிங்கப்பூர்ச் சூழல் எவ்வளவுதான் நவீனமயமானலும் தீபாவளிப் பாரம்பரியங்களைக் கடைப்பிடிப்பதில் பலர் இன்னமும் உறுதியுடன் இருப்பதைத் தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டனர்.

காலை 9 மணிக்கெல்லாம் சிராங்கூன் சாலையில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயம், ஸ்ரீ வடபத்திரக் காளியம்மன் ஆலயம், ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயம் ஆகியவற்றில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

அதிகாலை 4.30 மணிகெல்லாம் எழுந்து தலைக்கு எண்ணெய் வைத்துக் குளித்து வழிபாட்டுடன் தீபாவளியைத் தொடங்கிய குடும்பங்களில் திரு ராஜா ராமன் குடும்பமும் ஒன்று.

“வழக்கமான எண்ணெயுடன் சேர்த்து சீரகம், சீயக்காய் போன்ற பொருள்களையும் சேர்த்து காய்ச்சி அதைத் தலையில் தேய்த்துக் குளிப்போம்,” என்றார் திரு ராஜா ராமன்.

சிராங்கூன் சாலையில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்திற்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் காலை 8 மணியிலிருந்து வரத் தொடங்கினர்.
சிராங்கூன் சாலையில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்திற்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் காலை 8 மணியிலிருந்து வரத் தொடங்கினர். - படம்: செய்யது இப்ராஹிம்

முன்பெல்லாம் தாத்தா, பாட்டி காலத்தில் வாரத்திற்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது வழக்காம். ஆனால், காலப்போக்கில் பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் அந்தப் பழக்கத்தைக் கைவிட்டதாகக் கூறினார் திருமதி அனு.

“அதுபோன்ற நல்ல பழக்கங்களை மீண்டும் கடைப்பிடிக்க இதுபோன்ற பண்டிகைகள் நினைவுறுத்துகின்றன,” என்றார் திருமதி அனு.

பலகாரங்கள் இல்லாத கொண்டாட்டமா? தீபாவளிக்கு ஒருசில பலகாரங்களை வீட்டிலேயே செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளோரில் திருமதி நளாயினியும் ஒருவர்.

“குடும்பத்துடன் இணைந்து பலகாரங்கள் செய்வதில் ஒரு தனி இன்பம். கடையில் எவ்வளவுதான் வாங்கினாலும் அன்புக்குரியவர்களுடன் அதைச் சேர்ந்து செய்வதில்தான் திருப்தி இருக்கிறது,” என்றார் அவர்.

வீட்டிற்கு வந்த புதிய உறுப்பினருடன் தீபாவளியை இவ்வாண்டு கொண்டாடுகின்றனர் திரு கார்த்திக் குடும்பம். மூன்று தலைமுறைகள், அதாவது அம்மா, அப்பா, ஆறுமாத மகள், மனைவி எனக் குடும்பமாக ஆலயத்திற்குச் சென்றார் திரு கார்த்திக்.

தீபாவளி என்றால் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதுதான் என்ற ஒருமித்தக் கருத்தைப் பலர் தமிழ் முரசிடம் கூறினர்.

ஒருசிலர் இன்றே உற்றார் உறவினர்களைச் சென்று சந்திக்கவிருக்கின்றனர். ஆனால், நாளை மீண்டும் வேலைக்குச் செல்லவிருப்பதால் வேறு சிலர் வார இறுதியில் அவ்வாறு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

பாரம்பரியத்தைக் கடைபிடிப்பதில் மக்கள் கூடுதல் கவனம் செலுத்தினர்.
பாரம்பரியத்தைக் கடைபிடிப்பதில் மக்கள் கூடுதல் கவனம் செலுத்தினர். - படம்: செய்யது இப்ராஹிம்
குறிப்புச் சொற்கள்