பொதுப் போக்குவரத்தில் தொல்லை தரும் நடத்தையைக் கட்டுப்படுத்த புதிய அறிவிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 160க்கும் மேற்பட்ட குற்றச் செயல்கள் குறித்த எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 2024 முதல் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அறிவிப்புப் பலகைகள், பயணிகள் சத்த அளவைக் குறைவாக வைத்திருக்கவும், தரையில் உட்காருவதைத் தவிர்க்கவும், ஒரே ஓர் இருக்கையில் மட்டுமே அமரவும் நினைவூட்டுகின்றன.
எம்ஆர்டி ரயில்கள், பேருந்துகள் இரண்டிலும் சத்தம் தொடர்பான அறிவிப்புப் பலகைகள் இருக்கும். மற்றவை எம்ஆர்டி கட்டமைப்பில் மட்டுமே வைக்கப்பட்டிருக்கும்.
டிசம்பர் 2024 முதல் மே 2025 வரை, பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை, ஜூன் முதல் நவம்பர் 2024 வரையிலான முந்தைய ஆறு மாதங்களைவிட நான்கு மடங்கு அதிகமாகும்.
இந்த விதிகளை மீறும் பயணிகள் பிடிபட்டால், குற்றம் குறித்த அறிவிப்பைப் பெறலாம். ஒவ்வொரு விதி மீறலுக்கும் $500 வரை அபராதம் விதிக்கப்படும்.
ரயில்வே வளாகத்தின் எந்தப் பகுதியையும் அசுத்தப்படுத்துவது போன்ற கடுமையான விதி மீறல்களுக்கு $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். போக்குவரத்து நிறுவனங்களுக்குப் பயணிகளை அகற்றவோ அல்லது காவல்துறைக்கு அறிவிக்கவோ அதிகாரம் அளிக்கப்படும்.
அமலாக்கம் அதிகரித்த போதிலும், அறிவிப்புப் பலகையின் மூலம் கிடைத்த நன்மைகள் குறித்து பயணிகளிடமிருந்து மாறுபட்ட கருத்துகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
சேனல் நியூஸ் ஏஷியா (சிஎன்ஏ) நேர்காணல் செய்த ஆறு பயணிகளில், ஒருவர் மட்டுமே புதிய அறிவிப்புப் பலகைகளைக் கவனித்ததை நினைவுகூர்ந்தார்.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், பலர் தங்கள் பயணங்கள் குறிப்பிடத்தக்க வகையில் அமைதியாகிவிட்டதாகக் கூறினர்.
அலுவலக நிர்வாகியான 66 வயது ஜென்னி இயோ, எம்ஆர்டி அல்லது பேருந்தில் தினசரி பயணத்தின்போது சத்தமாகத் தொலைபேசி உரையாடல்களைக் கேட்டதில்லை என்று கூறினார். இருப்பினும், இது அவரது பயணம் குறுகியதாக இருப்பதால் இருக்கலாம் என்று அவர் கருத்துரைத்தார்.
மற்ற பயணிகள் நேர்மறையான கருத்துகளை தெரிவித்தனர்.
கேசி எஸ் என்று மட்டுமே அறியப்பட விரும்பிய ஒரு சந்தைப்படுத்துதல் நிபுணர், தனது வீட்டிற்கும் பணியிடத்திற்கும் இடையிலான 30 நிமிட எம்ஆர்டி பயணத்தின்போது கிட்டத்தட்ட 90 விழுக்காட்டு நேரம் இடையூறு விளைவிக்கும் நடத்தையை எதிர்கொள்வதாகக் கூறினார்.
“அவர்கள் தங்கள் ஒலிப் பெருக்கிகளில் அல்லது கேள்பொறி (ஹெட்ஃபோன்) பயன்படுத்தாமல் ரயிலில் நாடகங்களைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்,” என்று அவர் கூறினார்.
புதிய அறிவிப்புப் பலகைகள் மிகப்பெரிய அளவில் பயனுள்ளதாக இல்லை என்று 44 வயதான அலுவலக நிர்வாகி திருமதி நோரைசா அஷிராஃப் கூறினார். “குறுகிய காலத்தில் சிங்கப்பூரர்களின் மனநிலையை மாற்ற, அது அவ்வளவு பயனுள்ளதாக இருக்காது என்று நான் நினைக்கிறேன். இந்தச் செய்திகள் அவர்களிடம் சென்று சேர சிறிது காலம் எடுக்கும்,” என்றார்.

