தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெண்மீது மோதி காயம் விளைவித்த சைக்கிளோட்டிக்குச் சிறைத் தண்டனை

2 mins read
afd40d31-15a2-42dc-bd2e-72601d069f75
பெண்மீது சைக்கிளை மோதி காயம் விளைவித்த எட்மண்ட் குவெக் ஜூன் வெய் செய்த தவற்றை ஒப்புக்கொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் வேகமாக சைக்கிளை ஓட்டி பாதசாரி மீது மோதி காயம் விளைவித்த ஆடவருக்கு ஒரு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

34 வயது எட்மண்ட் குவெக் ஜூன் வெய் சைக்கிளால் மோதியதில் 48 வயது பெண்ணின் மண்டை ஓட்டில் முறிவு ஏற்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் சைக்கிளோட்டிய குவெக், மணிக்கு 22 கிலோமீட்டர் வேகத்தில் சைக்கிளை ஓட்டினார்.

அந்த வட்டாரத்தில் அனுமதிக்கப்பட்ட 25 கிலோமீட்டர் வேகத்தைவிட குறைவான வேகத்தில் சைக்கிளை ஓட்டியபோதும் குவெக் எதிரிவில் வருவோரைக் கவனிக்க தவறியதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

எதிரில் ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்மீது குவெக் மோதியதில் பெண்ணின் மூளைக்கு அருகே ரத்தக் கசிவு ஏற்பட்டது. அவர் சாங்கி பொது மருத்துவமனையின் நரம்பியல் அறுவைச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

இவ்வாண்டு பிப்ரவரி 21ஆம் தேதி வெளிவந்த மருத்துவ அறிக்கை விபத்துக்குப் பின் பெண்ணின் நுகரும் ஆற்றல் குறைந்துள்ளதாகவும் முன்புறம் குனியும்போது மயக்கம் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டது.

அதோடு பெண்ணின் இடது காதின் ஆற்றல், சுவைக்கும் ஆற்றல் ஆகியவை குறைந்துள்ளன.

சம்பவ நாளில் குவெக் கீழே பார்த்தவாறு சைக்கிளை ஓட்டியதாக வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார். அவர் மேலே பார்த்தபோது ஒரு பெண் தமக்கு முன்பாக ஓடிக்கொண்டிருந்ததைக் கண்டார்.

சைக்கிள் பெண்மீது மோதியதில் சைக்கிளோட்டி சைக்கிளிலிருந்து ஏறியப்பட்டதோடு அந்தப் பெண்ணும் கீழே விழுந்ததாக வழக்கறிஞர் சுட்டினார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி கைதான குவெக் மீது இரண்டு மாதங்கள் கழித்து நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பெண்ணுக்கு 90 நாள்கள் மருத்துவமனை விடுப்பு வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்