தோ பாயோ வட்டாரவாசிகள் குடியிருப்புப் பேட்டைக்கு அப்பாலும் பாதுகாப்பாகவும் எளிதாகவும் சென்றுவரக் கூடுதல் வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன. சைக்கிள் பாதைகள் 10.8 கிலோமீட்டர் நீட்டிக்கப்பட்டுள்ளன. அவை நீண்டகால அடிப்படையில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் கைகொடுக்கும்.
தோ பாயோ குடியிருப்பாளர்கள் அருகில் உள்ள பிரேடல், கேல்டிகாட் எம்ஆர்டி நிலையங்களுக்குச் சென்றுவர சைக்கிள் பாதைகள் உதவியாக இருக்கும். அவற்றுடன் அருகில் உள்ள வட்டாரங்களுக்குப் போய்வரவும் அவை வசதியாக இருக்கும்.
நிலப் போக்குவரத்து ஆணையம் சனிக்கிழமை (அக்டோபர் 18) வெளியிட்ட அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
எடுத்துக்காட்டாக, தோ பாயோ குடியிருப்பாளர்கள் இப்போது பிஷான்-ஆங் மோ கியோ பூங்காவிற்கு 15 நிமிடங்களுக்குள் சைக்கிளில் செல்ல முடியும். அங்கு அவர்கள் காலாங் ஆற்றைப் பின்தொடர்ந்து மரினா பேயை அடைய முடியும் என்று ஆணையம் மேற்கோள் காட்டியது.
“புதிய சைக்கிள் பாதைகள் மேலும் துடிப்புமிக்க வாழ்க்கைமுறைக்கு உறுதுணையாகச் செயல்படும். வட்டாரவாசிகள் அன்றாடம் நடக்கவோ சைக்கிளில் செல்லவோ அக்கம்பக்கத்தில் உள்ள எழில்மிகு காட்சிகளை ரசிக்கவோ புதிய பாதைகள் வகைசெய்யும். சைக்கிள் பாதைகளைப் பயன்படுத்துவன் மூலம் மக்கள் அவர்களின் சொந்த நலனுக்கும் சிங்கப்பூரின் நீடித்த நிலைத்தன்மைக்கும் பங்காற்ற முடியும்,” என்று ஆணையம் குறிப்பிட்டது.
சில பாதைகள் உண்மையில் 2.8 கிலோமீட்டர் நீளமுள்ள திறந்தவெளி வடிகால்களிலிருந்து மாற்றப்பட்டன. அவை மூடப்பட்டு நிலத்தடி வடிகால்களாக மறுகட்டமைக்கப்பட்டன, இதனால் பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்கள் நடைபாதையைப் பகிர்ந்து கொள்ள அதிக இடம் கிடைத்தது.
15க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களில் புதிய புறவழிச் சாலைப் பாதைகள் அறிமுகப்படுத்தப்படுவதும், எட்டுக்கும் மேற்பட்ட போக்குவரத்துச் சந்திப்புகளில் பரந்த பாதசாரி கடப்பிடங்கள் அறிமுகப்படுத்தப்படுவதும் இதர மாற்றங்களில் அடங்கும்.
பிரேடல் எம்ஆர்டி நிலையத்தில் சைக்கிள்களை நிறுத்துவதற்குக் கூடுதலாக 64 சட்டங்கள் பொருத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
2030ஆம் ஆண்டுக்குள் தீவு முழுதும் உள்ள சைக்கிள் பாதைகளின் நீளம் கிட்டத்தட்ட 1,300 கிலோமீட்டரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிப்போரில் 80 விழுக்காட்டினர் ஒருசில நிமிடங்களில் சைக்கிள்பாதையை அடைந்துவிட முடியும்.

