தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இணைய மீள்திறன் மையம் 2026ல் திறக்கப்படும்

2 mins read
174ce659-84e3-4116-8c68-76bb570ff158
அக்டோபர் 21ஆம் தேதியன்று நடைபெற்ற நிறுவனங்களுக்கான எஸ்ஜி இணையப் பாதுகாப்பு நிகழ்வில், இணையப் பாதுகாப்பு விளையாட்டில் விருந்தினர்கள் பங்கேற்பதை தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சர் டான் கியாட் ஹாவ் (நடுவில்) பார்வையிடுகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இணையத் தாக்குதல்களுக்கு ஆளாகும்போது சிறிய, நடுத்தர நிறுவனங்கள் புதிய உதவி எண்ணை நாட முடியும்.

உதவி எண்ணை நிர்வகிக்கும் ஒரு புதிய இணைய மீள்திறன் மையம், பாதிப்புகளைக் கண்டறிய இணையப் பாதுகாப்புக்கான காரணங்கள் அல்லது அமைப்பு பகுப்பாய்வையும் வழங்கும்.

2026ஆம் ஆண்டு திறக்கப்படும் இணைய மீள்திறன் மையம், சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தின் செயல்பாட்டில் அதன் வளாகத்தில் அமைக்கப்படும்.

எஸ்ஜி டெக், சிங்கப்பூர் சீன வர்த்தக, தொழிற்சபை போன்ற வர்த்தகச் சங்கங்களும் இணைய மீள்திறன் மையத்தை நடத்துவதற்கான வளங்களை வழங்கும். இது சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தால் வழிநடத்தப்பட்டு சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பால் ஆதரிக்கப்படும்.

அக்டோபர் 21 அன்று, சிங்கப்பூர் அனைத்துலக இணைய வாரத்தின்போது நடைபெற்ற நிறுவனங்களுக்கான எஸ்ஜி இணையப் பாதுகாப்புக் கருத்தரங்கில் இணைய மீள்திறன் மையம் நிறுவப்படுவதை அறிவித்த தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சர் டான் கியாட் ஹாவ், தாக்குதல்கள் நிகழும் முன் வர்த்தகங்களின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், சம்பவங்கள் நிகழும்போது விரைவாக மீண்டு வரவும் உதவும் நடுவமாக இந்த மையம் செயல்படுகிறது என்று கூறினார்.

சிங்கப்பூரில் உள்ள 10 நிறுவனங்களில் எட்டுக்கும் மேற்பட்டவை ஓராண்டில் குறைந்தது ஒரு இணையப் பாதுகாப்பு சம்பவத்தையாவது சந்தித்துள்ளதாகவும், கிட்டத்தட்ட அனைத்தும் வர்த்தக இடையூறுகள், தரவு இழப்பு, நற்பெயர் சேதம் ஆகியவற்றைச் சந்தித்துள்ளதாகவும் திரு டான் சுட்டிக்காட்டினார்.

இந்த மையம் ஏற்பாடு செய்யும் பயிலரங்குகளிலிருந்து சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பயனடையலாம் என்று திரு டான் கூறினார்.

“இந்த மையம், வர்த்தகங்களுக்கு சம்பவத்திற்குப் பிந்தைய ஆதரவையும் வழங்கும். இது நிறுவனங்கள் இணையப் பாதுகாப்பு சம்பவங்களால் பாதிக்கப்படும்போது அவை அதிலிருந்து மீள்வதற்கு உதவும்,” என்றும் திரு டான் விவரித்தார்.

பல நிறுவனங்கள், குறிப்பாக சிறிய, நடுத்தர நிறுவனங்கள், இணையச் சம்பவத்தால் பாதிக்கப்படும்போது என்ன செய்வது என்று தெரியவில்லை என்று அரசாங்கத்திடம் கூறியுள்ளதால் இந்த மையம் அமைக்கப்படுவது முக்கியமானதாகத் திகழ்கிறது என்று திரு டான் மேலும் கூறினார்.

2026ஆம் ஆண்டு இந்த மையம் திறக்கப்படும்போது, இணையச் சம்பவங்களை எதிர்கொள்ளும் வர்த்தகங்களுக்கான நம்பகமான முதல் உதவியளிக்கும் நேரடி தொடர்பு எண்ணைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், உள்ளூர் வர்த்தகங்களின் அடிப்படை இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துவதும், ​​அதன் முக்கிய முன்னுரிமைகளாக இருக்கும்.

குறிப்புச் சொற்கள்