குறுக்குத் தீவு ரயில் பாதைக்கான இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கிவிட்டன. ஆறு புதிய எம்ஆர்டி நிலையங்களுக்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.
இதற்கான சுரங்கப் பணிகள் மே மாதம் தொடங்கின.
டர்ஃப் சிட்டியிலிருந்து ஜூரோங் ஏரி வட்டாரம் வரை நிலத்துக்கு அடியில் இந்தப் பணிகள் நடைபெறுகின்றன.
சிங்கப்பூரில் நிலத்துக்கு அடியில் ஆக ஆழமான கிங் ஆல்பர்ட் பார்க் எம்ஆர்டி நிலையத்தைக் கட்டும் பணிகளும் இதில் அடங்கும்.
இந்த நிலையம் நிலத்துக்கு அடியில் 50 மீட்டர் ஆழத்தில் உள்ளது. இது 16 மாடிக் கட்டடத்தின் உயரத்துக்குச் சமம்.
இதற்கு முன்பு பென்கூலன் எம்ஆர்டி நிலையம்தான் நிலத்துக்கு அடியில் ஆக அழமான நிலையமாக இருந்தது.
மூன்றாம் கட்ட பணிகளுக்கான பொறியியல் ஆய்வுகள் கிட்டத்தட்ட நிறைவடைய இருப்பதாக தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் திங்கட்கிழமை (ஜூலை 7) தெரிவித்தார்.
ஜூரோங் தொழிற்பேட்டைக்குச் சேவையாற்றும் வருங்கால எம்ஆர்டி நிலையங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் இவ்வாண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் எட்டாவது எம்ஆர்டி ரயில் பாதையான குறுக்குத் தீவு ரயில் பாதை, ரயில் கட்டமைப்பின் மீள்திறனை பேரளவில் மேம்படுத்தும் என்று திரு சியாவ் கூறினார்.
குறுக்குத் தீவு ரயில் பாதைக்கான இரண்டாம் கட்ட பணிகளுக்காக கிளமெண்டியில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் அவர் கலந்துகொண்டு பேசினார்.
வட்ட ரயில் பாதையைத் தவிர்த்து தற்போது செயல்பாட்டில் உள்ள உள்ள அனைத்து ரயில் பாதைகளுடன் குறுக்குத் தீவு ரயில் பாதை இணைக்கப்படும்.
குறுக்குத் தீவு ரயில் பாதையில் அறிவிக்கப்பட்ட 21 நிலையங்களில் எட்டு நிலையங்கள் ரயில் சந்திப்புகளாகச் செயல்படும்.
50 கிலோமீட்டர் நீளமுள்ள குறுக்குத் தீவு ரயில் பாதை சிங்கப்பூரின் ஆக நீண்ட நிலத்தடி எம்ஆர்டி ரயில் பாதையாகத் திகழும்.
முதல் கட்ட பணியில் 12 நிலையங்கள் அடங்கும். இவை 2030ஆம் ஆண்டில் திறக்கப்படும்.
பாசிர் ரிஸ் வட்டாரத்தில் பொங்கோலுக்கான நான்கு நிலையங்களைக் கொண்ட ரயில் பாதை நீட்டிப்பு 2032ஆம் ஆண்டில் இயங்கத் தொடங்கும்.