சிங்கப்பூரின் பொருளியல், மின்னிலக்கப் பரிவர்த்தனைகளை அதிகம் சார்ந்துள்ளது. பல நிறுவனங்களுக்கும் பயன்பாட்டாளர்களுக்கும் வசதியை அது வழங்கினாலும், கட்டண அட்டைகள் களவுபோவது அதிகரித்து வருவது அனைத்துலக கவனத்தை ஈர்த்துள்ளது.
விபிஎன் (VPN) எனப்படும் தனியார் கணினிகளை இணைக்கும் மெய்நிகர் இணையச் சேவைகளை வழங்கும் ‘நொர்ட்விபிஎன்’ (NordVPN) என்ற நிறுவனம் ‘நொர்ட்ஸ்டெல்லார்’ (NordStellar) என்ற ஆய்வாளர் குழுவை அமைத்துள்ளது. லித்துவேனியாவைத் தலைமையகமாகக் கொண்டு உலகமெங்கும் இயங்கும் அதன் குழுவினர் இணையத்தில் ஏற்படக்கூடிய அபாயங்களை நிர்வகிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அவர்களின் ஆய்வுகளின்படி, கட்டண அட்டைகள் திருடப்பட்டு, இணையத்தில் விற்கப்படுகின்றன. அதன் அடிப்படையில் அமெரிக்காவுக்கு அடுத்து, சிங்கப்பூரில் அதிகமான கட்டண அட்டைகள் திருட்டு நடந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் கட்டண அட்டைகள், இணையத்தில் ஓர் அட்டைக்கு $17.22 என்று விற்பனையாகின்றன. கடந்த 2023ஆம் ஆண்டைவிட 29 விழுக்காடு அதன் மதிப்பு கூடியுள்ளது என்று அறியப்பட்டுள்ளது.
கட்டண அட்டை பயனாளர்கள் அவர்களுக்கு அனுப்பப்படும் வரவுசெலவு விவரங்களைக் கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மறைச்சொற்களைக் கடினமானதாகவும், மற்றவர் எளிதில் அறியமுடியாத வகையிலும் வைத்துக்கொள்ளவேண்டும். கைப்பேசிகளில் மறைச்சொற்களையும் குறியீடுகளையும் சேமித்து வைப்பதைத் தவிர்க்கவேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இணையத்தில் குற்றச்செயல்களுக்கென இயங்கும் ‘இருண்ட வலைத்தளம்’ (Dark Web) இதுபோன்ற விற்பனைகளுக்குப் பயன்படுகிறது. களவாடப்படும் கட்டண அட்டைகளில் 60 விழுக்காடு அமெரிக்காவைச் சேர்ந்தவை. சிங்கப்பூர் 11 விழுக்காட்டுடன் இரண்டாம் இடத்திலும் ஸ்பெயின் 10 விழுக்காட்டுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
நியூசிலாந்தின் கட்டண அட்டைகளே அதிக விலை பெறுகின்றன. ஓர் அட்டை $59.12க்கு விற்பனையாகின்றது. இவ்வாண்டு மே மாதம் நடந்த ஆய்வில் 50,700 கட்டண அட்டைகளின் பரிவர்த்தனைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
“சிங்கப்பூர் போன்ற பொருளியல் ரீதியாக வளர்ந்த நாடுகளின் கட்டண அட்டைகள் இணைய குற்றவாளிகளுக்கு முதன்மை இலக்காக இல்லை. ஏனெனில் இந்த நாடுகள் பொதுவாக வலுவான மோசடி எதிர்ப்பு அமைப்புகளையும் மிகவும் பயனுள்ள வாடிக்கையாளர் பாதுகாப்பையும் கொண்டுள்ளன,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

