தனியார் தொப்புள்கொடி ரத்த வங்கியான கார்ட்லைஃப், அதற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்படுவதன் தொடர்பில் திங்கட்கிழமை (அக்டோபர் 27) சுகாதார அமைச்சுக்குப் பதிலளித்துள்ளதாகக் கூறியுள்ளது.
சுகாதார அமைச்சு, கார்ட்லைஃப் நிறுவனத்திற்குத் தற்காலிகத் தடை விதிப்பது குறித்துப் பரிசீலிப்பதற்கு முன்பு அது பதிலளிக்க 14 நாள் அவகாசம் கொடுத்திருந்தது. அது திங்கட்கிழமை முடிவுக்கு வந்தது. கடைசி நாளில் பதிலை அமைச்சுக்கு அனுப்பியிருக்கிறது ரத்தச் சேமிப்பு வங்கி.
ஓராண்டுக்குத் தற்காலிகத் தடை விதிப்பது பற்றிப் பரிசீலிக்கும் நோக்கம் இருப்பதாக நிறுவனத்திற்கு அமைச்சு சென்ற மாதம் (செப்டம்பர்) 29ஆம் தேதி அறிக்கை அனுப்பியிருந்தது. அதற்கு அடுத்த நாளிலிருந்து புதிய தொப்புள்கொடி ரத்தத் தொகுப்புகளைப் பெறுவது, சோதனை செய்வது, சேமிப்பது முதலிய செயல்முறைகளை நிறுத்தியதாக நிறுவனம் தெரிவித்தது.
தொப்புள்கொடி ரத்தத்தில் இருக்கும் மூல உயிரணுக்கள் ரத்த நோய்களையும் சிலவகை புற்றுநோய்களையும் குணப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு குழந்தை அதன் வாழ்வின் பிற்காலத்தில் அத்தகைய நோய்களால் பாதிக்கப்பட்டால் அந்த மூல உயிரணுக்கள் உதவியாக இருக்கும்.
கார்ட்லைஃப் நிறுவனத்தின் ரத்தச் சேமிப்பில் குறைபாடுகள் இருந்தது தணிக்கைச் சோதனையில் தெரியவந்ததைத் தொடர்ந்து, 2023ஆம் ஆண்டு நவம்பரில் அதற்கு ஆறு மாதத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது.
பின்னர் சென்ற ஆண்டு (2024) செப்டம்பரில் அதன் செயல்முறைகளைச் சில நிபந்தனைகளின்கீழ் மீண்டும் தொடங்க அனுமதிக்கப்பட்டது. இவ்வாண்டு ஜனவரி 14ஆம் தேதி அதன் உரிமம் ஓராண்டுக்குப் புதுப்பிக்கப்பட்டது.
இருப்பினும் இடைக்காலத் தணிக்கையின்போது கார்ட்லைஃப், பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியது தெரியவந்தது.
அதனையடுத்து அந்தத் தனியார் ரத்தச் சேமிப்பு வங்கி ஓராண்டுத் தற்காலிகத் தடையை எதிர்நோக்கியுள்ளது.

