தொண்ணூறு ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் தமிழ் முரசு, சிங்கப்பூரின் சமூக வரலாற்று, வாழ்க்கை முறை ஆகியவற்றுக்கான கருவூலம். செறிவாக, நடுநிலையான, நம்பகத்தன்மையான தகவல் பெட்டகம் என்பது ஆய்வாளர்களின் பொதுவான கருத்து.
சிங்கப்பூரில் பெரும்பாலார் அறியாத, சிங்கப்பூருக்குச் சிறுபான்மை மொழியாகத் திகழ்கிற தமிழ்மொழியில் எழுதப்படும் செய்திக்கட்டுரைகளும் கவிதை, சிறுகதை போன்ற புதினப் படைப்புகளும் வருங்காலத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படக்கூடிய தரவுகள்.
தென்கிழக்காசியாவையும் சிங்கப்பூரையும் தம் ஆய்வு மையப்படுத்துவதாகச் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த ஆங்கில மொழி, இலக்கியப் பேராசிரியர் சித்ரா சங்கரன் தெரிவித்தார்.
“அவ்வப்போது ஆங்கில இலக்கியத்தையும் தமிழ் இலக்கியத்தையும் ஒப்பீடு செய்யும் ஆய்வுக் கட்டுரைகளை நான் வெளியிட்டுள்ளேன். அந்நேரங்களில், தொடர்புடைய செய்திக் கட்டுரைகள் அல்லது சிறுகதைகள் சிலவற்றை எடுத்துப் படிப்பேன்,” என்று பேராசிரியர் சித்ரா தெரிவித்தார்.
சுற்றுப்புறம், பண்பாடு ஆகியவற்றுக்கான செய்திக் கட்டுரை ஒன்றைத் தாம் அண்மையில் எழுதியதாகக் குறிப்பிட்ட பேராசிரியர் சித்ரா, பண்டைய இலக்கியத்தில் காணப்படும் திணை என்ற பண்பாட்டுக் கருத்துருவைப் பற்றிக் குறிப்பிட்டார்.
“இதற்காக நான், எழுத்தாளர் லதாவின் யாருக்கும் இல்லாத பாலை, கமலாதேவி அரவிந்தனின் திணை ஆகியவற்றைப் பகுத்தாய்ந்தேன். தமிழ் முரசில் அவை வெளிவந்ததால் அதனை என் ஆய்வறிக்கையில் மேற்கோள் காட்டினேன்,” என்று அவர் கூறினார்.
சிங்கப்பூர்த் தமிழர்கள், தங்கள் சமூகம் குறித்த யோசனைகள், தங்கள் திறமைகள், அச்சமூகத்தின் நடவடிக்கைகள், உலக நடவடிக்கைகள் ஆகியவற்றை ஆவணப்படுத்தும் ஒரே ஊடகம், தமிழ் அல்லது இந்திய நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுகளுக்கு மிக முக்கிமான மூலமாகத் திகழ்கிறது என்று பேராசிரியர் சித்ரா தெரிவித்தார்.
இவரைப்போல தமிழ் முரசு செய்திக் கட்டுரைகள் பலவற்றைத் தாமும் ஆய்வுகளுக்குப் பயன்படுத்துவதாக நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தேசிய கல்விக்கழக ஆசிய மொழிகள், பண்பாடுகள் துறையின் துணைத் தலைவர் (தமிழ்) இணைப் பேராசிரியர் சீதாலட்சுமி தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
தமிழ்மொழிக்கல்வி தொடர்பான செய்திகள், சமூகச் செய்திகள், திரைச்செய்தி உள்ளிட்ட தலைப்பிலான செய்திகளைத் தாம் தயாரித்துள்ள தமிழ் சார்ந்த ஆய்வுகளில் மேற்கோள் காட்டப்படுவதாகப் பேராசிரியர் சீதாலட்சுமி கூறினார்.
“கற்றல், கற்பித்தல் தொடர்பான ஆய்வுகளிலும் மொழி, இலக்கியம் ஆகியன காலங்காலமாக எவ்வாறு அமைந்து வருகின்றன என்பதைப் பற்றி ஆராயவும் தமிழ் முரசைப் பயன்படுத்தலாம்,” என்று பேராசிரியர் சீதாலட்சுமி குறிப்பிட்டார்.
சிங்கப்பூர்ச் சமூகத்துடன் உலகச் சமூகத்தையும் இணைத்துப் பார்க்கும் வகையில் அறிவு வளர்ச்சி, உணர்வு மேம்பாடு, தமிழ்மொழி, பண்பாடு, அறிவியல், புவியியல், வரலாறு, மனித வாழ்க்கையின் மாண்புகள், சொற்கள், சொற்றொடர்கள், பனுவல்கள் ஆகியவற்றின் பரிமாணங்களையும் படிமலர்ச்சியையும் ஆராய தமிழ் முரசின் செய்திகள், கட்டுரைகள், இலக்கியப்பகுதிகள் ஆகியன பேருதவியாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் மொழியியல், வரலாறு, சமூகவியல் ஆகியவற்றின் நுட்பமான ஆராய்ச்சிக்காக, தமிழ் முரசு இதழின் கட்டுரைகள் பயன்படுவதாக சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் தென்கிழக்காசிய ஆய்வுத்திட்ட இணைப் பேராசிரியர் ராஜேஷ் ராய் தெரிவித்தார்.
“வரலாற்று ஆய்வாளரான நான், தமிழ் முரசு நாளிதழ்களை வரலாற்று ஆவணங்களாகக் கருதுகிறேன். 1930கள் முதல் சிங்கப்பூரில் செயல்பட்டு வந்த சுதந்திரப் போராட்ட இயக்கங்கள், 1950களில் சிங்கப்பூர்வாழ் இந்தியர்களின் குடியுரிமைச் சிக்கல்கள், மொழிசார்ந்த இயக்கங்கள், சீர்திருத்த முயற்சிகள் உள்ளிட்டவற்றை ஒட்டிய தகவல்களுக்காகத் தமிழ் முரசு இதழ்களை நாடுவேன்,” என்று அவர் கூறினார்.
அத்துடன், இரண்டாம் உலகப் போரின்போது வாழ்ந்தவர்களைப் பற்றி 2022ல் தமிழ் முரசு மூன்று பாகங்களாகப் பதிப்பித்த கட்டுரைகளைச் சிறந்த வரலாற்றுச் சேவையாக பேராசிரியர் ராஜேஷ் வருணித்தார்.
வருங்கால ஆய்வுக்காகத் தமிழ் முரசு இதழ் தொடர்ந்து வெளிவரவேண்டும் என வலியுறுத்திய பேராசிரியர் ராஜேஷ் ராய், இந்தியச் சமூகத்திற்காக நடப்பு விவகாரங்களைப் பொருத்தமாக ஆராயக்கூடிய பணி தமிழ் முரசுக்கு உரியது என்றும் சொன்னார்.