பழுதுபார்ப்பின்போது வாயிற்கதவு விழுந்து 24 வயது கட்டுமான ஊழியர் மரணம்

2 mins read
472b3a7f-eb75-42e0-9f21-adf2b965418c
சம்பவம் நேர்ந்த பகுதி. - படம்: கூகல் மேப்ஸ்

வேலை தொடர்பான சம்பவத்தில் கட்டுமான ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

பிடோக்கில் வியாழக்கிழமை (நவம்பர் 6) மாலை நேர்ந்த அவ்விபத்தில் சுயநினைவை இழந்த அந்த 24 வயது ஆடவர் சாங்கி பொது மருத்துவமனையில் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

132பி ஜாலான் பாரி பூரோங் என்னும் முகவரியில் நிகழ்ந்த சம்பவம் குறித்து மாலை 4.05 மணியளவில் தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் கூறின. அந்த முகவரியில் தரைவீடு ஒன்று இருப்பதை கூகல் மேப்ஸ் காட்டியது.

அங்கு நிகழ்ந்த சம்பவத்தில் சதிச்செயல் குறித்த சந்தேகம் எழவில்லை என ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பாக மனிதவள அமைச்சை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் அணுகியது.

பக்கவாட்டில் இருபுறமும் தானாக நகரக்கூடிய வாயிற்கதவு (automated sliding gate) ஒன்றைப் பழுதுபார்க்கும் பணியில் கட்டுமான ஊழியர் ஈடுபட்டு இருந்ததாகவும் அப்போது அந்தக் கதவு அவர்மீது விழுந்துவிட்டதாகவும் அமைச்சு கூறியது.

பொதுவான பாதுகாப்பு நடைமுறைப்படி, கனமான வாயிற்கதவுகளையும் இயந்திரச் சாதனங்களையும் இயந்திர உதவியாளரின் துணையின்றியோ தேவையான நடைமுறைகளைப் பின்பற்றாமலோ ஊழியர்கள் தாங்களாகச் சரிசெய்ய முயலக்கூடாது என அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

பழுதுபார்ப்பு, பராமரிப்புப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்குப் போதுமான பயிற்சி, மேற்பார்வை, தேவையான சாதனங்கள் போன்றவை அளிக்கப்பட்டுள்ளதையும் பாதுகாப்பான வேலை நடைமுறைகள் பின்பற்றப்படுவதையும் முதலாளிகள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

உயிரிழந்த ஊழியர் ‘யோங் ஃபோங் ஆட்டோகேட்’ (Yong Fong Autogate) நிறுவனத்தில் வேலை செய்துவந்ததாகக் கூறப்பட்டது.

அந்தச் சம்பவம் தொடர்பில் மனிதவள அமைச்சும் காவல்துறையும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன.

குறிப்புச் சொற்கள்