வாட்ஸ்அப் கணக்கைக் களவாடப் புதிய வழியைப் பயன்படுத்தும் மோசடிக்காரர்கள்: காவல்துறை எச்சரிக்கை

1 mins read
f1191b05-a2ac-4a75-887b-d0c46b51cd76
இணைய மோசடிகளில் பாதிக்கப்பட்டோர், வாட்ஸ்அப் கணக்கு நீண்டகாலமாய்ச் சரிபார்க்கப்படாததால் சிக்கலுக்கு உள்ளாகியிருப்பதாகக் குறுந்தகவல்களைப் பெற்றிருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. - படம்: சிங்கப்பூர்க் காவல்துறை

இணைய மோசடிக்காரர்கள், வாட்ஸ்அப் கணக்கைக் களவாடப் புதிய வழியைப் பயன்படுத்துவதாகக் காவல்துறை எச்சரித்திருக்கிறது.

அவர்கள் இணைய மோசடி செய்வதற்காக இணைப்புகளைக் கொண்ட குறுந்தகவல்களை முதலில் அனுப்புவர்.

அத்தகைய மோசடிச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டோர், வாட்ஸ்அப் கணக்கு நீண்டகாலமாய்ச் சரிபார்க்கப்படாததால் அது சிக்கலுக்கு உள்ளாகியிருப்பதாகக் குறுந்தகவல்களைப் பெற்றிருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதனை இணைப்புகளின் மூலம் சரிபார்க்கும்படி அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுவர். இணைப்பைச் சொடுக்கினால், அது போலி வாட்ஸ்அப் இணையத்தளத்திற்கு இட்டுச் செல்லும் என்று காவல்துறை கூறியது.

பாதிக்கப்பட்டோர், அவர்களின் கைப்பேசி எண்ணையும் சரிபார்ப்பதற்குரிய குறியீடுகளையும் பதிவிட்டவுடன் வாட்ஸ்அப் கணக்கின் கட்டுப்பாடு மோசடிக்காரர்களின் கைகளுக்குச் சென்றுவிடும். அதன் பிறகு, பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் உள்ளோருக்கு அவர்கள் கடன் கேட்டுப் பொய்யான கோரிக்கைகளை முன்வைப்பர்.

வாட்ஸ்அப் கணக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகுதான், தாங்கள் மோசடி செய்யப்பட்டது பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரியவரும் என்று காவல்துறை எச்சரித்தது.

வாட்ஸ்அப் கணக்கு, மோசடிக்காரர்களின் கைகளில் சிக்கிவிட்டது என்று சந்தேகப்படுவோர், வாட்ஸ்அப்பைத் தொடர்புகொள்ள வேண்டும். இணையப்பக்க முகவரி: https://faq.whatsapp.com/1131652977717250

பொதுமக்கள், 24 மணிநேரமும் இயங்கும் ஸ்கேம்‌ஷீல்டு உதவி எண்ணையும் அழைக்கலாம். தொலைபேசி எண்: 1799.

குறிப்புச் சொற்கள்