ஈசூன் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றின் கழிவறை உட்கூரையிலிருந்து விழுந்த கான்கிரீட்டால் 65 வயது ஆடவர் ஒருவர் காயமடைந்தார்.
இந்தச் சம்பவம் வியாழக்கிழமை (ஜூன் 19) நிகழ்ந்தது.
ஒய்வுபெற்றவரான திரு முகம்மது ஹஷிம் அர்ஷாத்தின் தலையில் பத்துக்கும் அதிகமான தையல்கள் போடப்பட்டன.
தலை, தோள்பட்டை, முழங்கால் ஆகியவற்றில் அவருக்குக் காயங்கள் ஏற்பட்டன.
வெள்ளிக்கிழமை (ஜூன் 20) மாலை அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதாக அவரது மகள் சித்தி நூராஷிக்கின் தெரிவித்தார்.
தமது தந்தை அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை என்று அவர் கூறினார்.
திரு முகம்மது ஹஷிமுக்கு ஏற்கெனவே பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, திரு ஹஷிமின் மனைவியிடம் பேசியதாக நீ சூன் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் உள்துறை அமைச்சருமான கா. சண்முகம் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அவர்களது குடும்பத்துக்குத் தேவையான உதவி வழங்கப்படும் என்று அந்தப் பதிவில் அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.
பழுதுபார்ப்புப் பணிகளுக்கான செலவும் இதில் அடங்கும்.
இந்த விவகாரம் குறித்து தமது தொண்டூழியர்கள் வீவகவுடனும் நகர மன்றத்துடனும் இணைந்து செயல்பட்டு வருவதாக அமைச்சர் சண்முகம் கூறினார்.